இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் சதம் விளாசினர்.
அதன் பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடியது. இந்திய அணி தனது முதல் விக்கெட்டை 74 ரன்களில் இருந்த போது இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 58 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் புஜாரா களமிறங்கி நிதானமாக ஆடிவர, சுப்மன் கில் மட்டும் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வந்தார். அவர் 195 பந்துகளை எதிர் கொண்ட அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் சதத்தினை பதிவு செய்தார். மேலும் இது அவரது சர்வதேச இரண்டாவது டெஸ்ட் சதமாகும்.
மொத்தம் 15 டெஸ்ட்களில் விளையாடியுள்ள சுப்மன் கில் 4 அரைசதங்களும், 2 சதங்களும் விளாசியுள்ளார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அவர், 235 பந்துகளில் 128 ரன்கள் சேர்த்த நிலையில் நாதன் லைன் பந்து வீச்சில் எல்.பி.டபள்யூ ஆகி வெளியேறினார். இவர் இந்த இன்னிங்ஸில் மட்டும் 12 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசியுள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது நாதன் லயன் பந்தில் சுப்மன்கில் அபாரமான சிக்ஸர் ஒன்றை விளாசினார். நேர் திசையில் சென்ற அந்த பந்து மைதானத்தில் ரசிகர்கள் இருக்கைக்குள் சென்றது. பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக அந்த பகுதியில் மட்டும் இருக்கைகள் வெள்ளை நிற துணியால் மூடப்பட்டிருந்தது.
இதனால், அந்த துணிக்குள் சென்ற பந்து காணாமல் போனது. அப்போது, அங்கே கூட்டத்தில் நின்ற ரசிகர் ஒருவர் அந்த வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்த இருக்கைகளுக்குள் உள்ளே நுழைந்து மாயமான பந்தை கண்டுபிடித்தார். பந்தை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் மேலே வந்த அந்த ரசிகர், அங்கே இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து ஆர்ப்பரித்தார். இதனால், போட்டி சில நிமிடங்கள் தாமதமானது. இந்த ரசிகர் பந்தை எடுத்து மைதானத்திற்குள் வீசுவதற்காக பேட்ஸ்மேன்களும், நடுவர்களும், ஆஸ்திரேலிய வீரர்களும் காத்திருந்தனர். இந்த வீடியோவும், இந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க,