ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் ஆடி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் தொடருக்கு கேப்டனாக பாட் கம்மின்ஸ் செயல்பட்டு வருகிறார். சில சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியா சென்ற பாட்கம்மின்ஸ் இந்தியா திரும்பாததால் 3வது டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  


என்ன காரணம்?


பார்டர் – கவாஸ்கர் கோப்பைத் தொடருக்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நாக்பூர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதையடுத்து, இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1-ந் தேதி இந்தூரில் தொடங்க உள்ளது.


ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தாய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயை பார்ப்பதற்காக பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார். தனது தாயை சந்தித்துவிட்டு 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்தியா திரும்பிவிடலாம் என்ற திட்டத்தில்தான் பாட் கம்மின்ஸ் சென்றார். ஆனால், தற்போது அவரது உடல்நிலை இன்னும் தேறாத காரணத்தால் தற்போதைய சூழலில் குடும்பத்தினருடனே இருப்பது நல்லது என்று பாட்கம்மின்ஸ் கருதுகிறார்.


3வது டெஸ்ட்:


இதுதொடர்பாக, பாட் கம்மின்ஸ் கூறியிருப்பதாவது, இந்த தருணத்தில் நான் இந்தியா திரும்ப வேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனால், இப்போது எனது குடும்பத்தினருடன் இப்போத இருப்பதுதான் சிறந்தது என்று கருதுகிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் எனது அணி வீரர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த ஆதரவிற்கும், அனைத்தையும் புரிந்து கொண்டதற்கும் நன்றி.


டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி 3 நாட்களிலே முடிந்ததால், தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் துபாயில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். அவர் விரைவில் டெல்லி திரும்ப உள்ளார். பாட் கம்மின்ஸ் தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


4வது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்:


ஆனாலும், அவரது தாயாரின் உடல்நிலையை பொறுத்தே அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதும், ஆடாததும் அமையும். பாட் கம்மின்ஸ் நான்காவது போட்டியிலும் ஆடாவிட்டால் அகமதாபாத்தில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டிக்கும் ஸடீவ் ஸ்மித்தே கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தடை விதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவது இது 3வது முறை ஆகும். இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் கேப்டனாக பாட்கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Harmanpreet Kaur Run-Out: அதே மாதிரியான அவுட்.. எதிரணியுடன் இணைந்து சதிசெய்யும் ரன் அவுட்.. தோனி, கவுர் கலங்கிய மொமெண்ட்!


மேலும் படிக்க: IND W vs AUS W: வீணான ஹர்மன்பிரீத் போராட்டம்..! 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி..! இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா..!