இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், கே.எல். ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லும் களமிறங்கினர். மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு முறை அவுட்டாகியும் கேப்டன் ரோகித் சர்மா தப்பித்தார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தே ரோகித் சர்மாவின் பேட்டின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் அடைந்தது. அதை சரியாக பிடித்தபோதிலும், மிட்சல் ஸ்டார்க் அம்பயரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அம்பயர் இல்லை என்று தலையாட்ட, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் டிஆர்எஸ்க்கு மறுப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து, அதே ஓவரின் நான்காவது பந்தில் ரோகித் சர்மாவின் பேடில் பந்து பட்டது. இங்கேயும் மிட்செல் ஸ்டார்க் வலுவான முறையீடு செய்தார். அதற்கும் ஸ்மித் டிஆர்எஸ் மறுப்பு தெரிவித்து விட்டார்.
இரண்டுமுறை தப்பித்த ரோகித் சர்மா ஓவரின் 5வது பந்தில் பவுண்டரி அடித்து தனது ரன் எண்ணிக்கையை தொடர்ந்தார். மிகப்பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 23 பந்துகளில் வெறும் 12 ரன்களில் அலெக்ஸ் கேரியிடம் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்திய அணியில் இரண்டு பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவும், கே.எல்.ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லும் களமிறங்கினர்.
அனைத்து விக்கெட்களை இழந்த இந்திய அணி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தூரில் நடைபெற்று வரும் போட்டியில் 33 ஓவர்களில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 22, கில் 21, பரத், உமேஷ் தலா 17 ரன்கள் சேர்த்தனர்.
அதேபோல், ஆஸ்திரேலிய அணி சார்பில் குஹ்னேமன் 5 விக்கெட்களும், நாதன் லயன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டாட் மர்பி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.