இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மூன்றாவது நாளிலேயே முடிவை எட்டவுள்ளது. இந்திய அணி வெற்றி பெற பெரும் போராட்டம் நடத்தவேண்டி உள்ளது. 


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் என அழைக்கப்படுகிறது. இதில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டு போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  


இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறி வந்தனர். இதனால் ஒருவர் கூட நிலைத்து நின்று விளையாடவில்லை. விக்கெட்டுகளும் சீட்டுகட்டு போல் சரியத் தொடங்கியதால், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.


அதன் பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு  தடுமாறினாலும் இந்திய அணியை விடவும் அதிக ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸில் தங்களது கரங்களை வலுப்படுத்திக் கொண்டனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 88 ரன்கள் முன்னைலை வகித்தது. 


அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸைப் போலவே தடுமாறியது. இன்னும் சொல்லப்போனால் முதல் இன்னிங்ஸின்  ரீ-ப்ளே போல தான் இரண்டாவது இன்னிங்ஸ் அமைந்தது. ஆனாலும் இந்திய அணி சார்பில் புஜாரா மட்டும் 142 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸர் உள்பட 59 ரன்கள் சேர்த்தார்.  மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. 


இந்த போட்டியில் இன்றுடன் சேர்த்து மொத்தம் மூன்று நாட்கள் மீதமுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியவின் கைவசம் 10 விக்கெட்டுகள் முழுமையாக உள்ளாது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியை 76 ரன்களுக்குள் இந்திய அணியால் சுருட்ட முடியுமா என்றால், அது ஜடேஜா, அஸ்வின், அக்‌ஷ்ர் படேல் மனதில் ஓடக்கூடிய நம்பிக்கையின் அளவினைப் பொறுத்து தான் அமையும் எனலாம். அதேபோல், சூழல் இந்திய அணிக்கு சாதகமாக மாற இவர்கள் மூவருடன் இணைந்து ஒட்டுமொத்த அணியும் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஆனாலும் போட்டி தற்போதுவரை ஆஸ்திரேலிய வசம் தான் உள்ளது எனலாம்.  இந்திய அணிக்கு இந்த போட்டியையும் வென்றால் தான் உலக டெஸ்ட் சாமியன் ஷிப் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது எளிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இன்றே போட்டி முடிவடைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.