ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலிய அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த நிலையில், 2வது இன்னிங்சில் இந்திய அணி ஓரளவு நல்ல ஸ்கோர் எடுக்க முயற்சித்தது. புஜாரா மட்டுமே சிறப்பாக ஆடியதாலும், மற்ற வீரர்கள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்காமல் சொதப்பியதாலும் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுருண்ட இந்தியா:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. நாக்பூர், டெல்லியில் நடைபெற்ற முதல் 2 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இந்தூரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 109 ரன்களுக்கு சுருண்ட நிலையில், நேற்று 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 2வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சைத் தொடங்கியது. நேற்றே ஆஸ்திரேலிய அணி வலுவாக இருந்த நிலையில், இன்று இந்திய அணியின் சுழலிலும், வேகத்திலும் ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட்டாகினர். 197 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி அவுட்டாக்கியது. ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், உமேஷ்யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
புஜாரா அரைசதம்:
இதையடுத்து, பின்தங்கிய நிலையுடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு கடந்த இன்னிங்சில் போலவே மோசமான தொடக்கமே அமைந்தது. சுப்மன்கில் 5 ரன்களில் அவுட்டாக, கேப்டன் ரோகித்சர்மாவும் 12 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து சொதப்பி வரும் விராட்கோலி 13 ரன்களில் அவுட்டானார். ஜடேஜாவும் 7 ரன்களுக்கு அவுட்டாக, புஜாரா – ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி நிதானமாக ஆடியது.
ஸ்ரேயாஸ் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்க முயற்சித்தார். ஆனால், நாதன் லயன் சுழலில் இந்திய வீரர்கள் சீட்டுக்கட்டாய் சரிந்தனர். ஒருபுறம் புஜாரா நங்கூரமிட்டாலும், அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ், ஸ்ரீகர்பரத், அஸ்வின் நாதன் லயன் சுழலில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த புஜாரா 142 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 59 ரன்கள் எடுத்த நிலையில் 8வது விக்கெட்டாக வெளியேறினார். இந்திய அணி கடைசியில் 10 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களுக்கு 2வது இன்னிங்சில் சுருண்டது. நாதன் லயன் 23.3 ஓவர்கள் வீசிய 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்டார் மற்றும் குகென்மன் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
76 ரன்கள் டார்கெட்:
ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் 75 ரன்கள் மட்டுமே முன்னிலை வகிப்பதால், ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 2வது நாள் ஆட்டமும் இன்றுடன் நிறைவு பெற்றது. 76 ரன்கள் மட்டுமே டார்கெட் என்பதால் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. அதேசமயம் மைதானத்தில் நாளை பந்துகள் நன்றாக சுழற்பந்துவீச்சுக்கு கைகொடுத்தால் அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் படேல் தாக்குதல் ஆட்டத்தின் போக்கும் மாற்றும் வாய்ப்பும் உண்டு.
இதனால், வெற்றி வாய்ப்பு மிக மிக குறைவாக உள்ள இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு அசுரபலம் பெற்றால் மட்டுமே இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நாக்பூர், டெல்லி டெஸ்ட் போட்டிகள் 3 நாட்களில் முடிந்த நிலையில் இந்தூர் டெஸ்ட் போட்டியும் மூன்றே நாளில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.