இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று (மார்ச் 1) இந்தூரில் தொடங்கியது. இதில், ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதற்கு முன்னர் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளைப் போல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முயன்ற ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு மூன்றாவது போட்டியில் பலன் கிடைத்தது. இந்திய அணி 27 ரன்களில் இருந்தபோது கேப்டன் ரோகித் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு முன்னரும் பின்னரும் இந்திய அணி சார்பில் நிலையான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. 27 ரன்களில் முதல் விக்கெட்டும், 34 ரன்களில் இரண்டாவது விக்கெட்டும் விழுந்தது. அதன் பின்னர் இந்திய அணியின் விக்கெட் சீட்டுக் கட்டு போல் மளமளவென விழுந்தது. 


ஆஸ்திரேலிய அணியின் சார்பில், குக்னமென் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நாதன் லைன் 3 விக்கெட்டுகளும் முர்ஃபி ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். 


முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்களில் சுருண்டது. இதன் பின்னர் களமிறங்கிய ஆஸிதிரேலிய அணி மிகவும் வலுவான தொடக்கத்தினை அமைத்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்திய அணியை விட 47 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்திய அணி சார்பில் ஜடேஜா மட்டுமே இதுவரை 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். களத்தில்  பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் கிரீன் ஆகியோர் உள்ளனர். இருவரும் அடித்து ஆடுபவர்கள் என்பதால் இந்திய அணிக்கு இரண்டாவது நாள் சவால இருக்கும் என கூறப்படுகிறது.