IND vs AUS 3rd Test: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை பெற்றது.


இந்திய அணி ஆல்-அவுட்


பார்டர்-கவாஸ்கர் டிராபியின் (BGT) 3வது டெஸ்டின் இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நேற்றைய நாளின் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, போட்டியின் 5வது நாள் ஆட்டத்தை இந்திய அணி இன்று தொடங்கியது. அதில் கூடுதலாக 8 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில், டிராவிஸ் ஹெட் பந்துவீச்சில் ஆகாஷ் தீப் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 260 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி, 185 ரன்கள் முன்னிலை பெற்றது.



ஒரு கட்டத்தில் இந்திய அணி ஃபாலோ - ஆன் பெறும் மோசமான சூழல் இருந்த நிலையில், கே.எல். ராகுல், ஜடேஜா, ஆகாஷ் தீப் மற்றும் பும்ராவின் அபாரமான செயல்பாட்டால், இந்திய அணி ஃபாலோ-ஆனை தவிர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா தொடங்கவிருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.


 






முதல் இன்னிங்ஸ் சுருக்கம்:


இப்போட்டியில் முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தால் 445 ரன்கள் குவித்தது. ஹெட் இந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார் மற்றும் 152 ரன்களை குவித்து தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். மறுபுறம், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்கள் எடுத்தார். இது 2024 ஆம் ஆண்டில் அவர் விளாசும் முதல் டெஸ்ட் சதமாகும்.


தொடர்ந்து களமிறங்கியபோது, இந்தியாவின் டாப் ஆர்டர் மீண்டும் ரன் சேர்க்க தடுமாறியது. கே.எல். ராகுல் போராடி 84 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா அற்புதமாக விளையாடி 77 ரன்களை வழங்கினார். இந்தியாவை ஃபாலோ-ஆனைத் தவிர்ப்பதற்கு நெருக்கமாக கொண்டு வந்தார். இருப்பினும், ஆகாஷ் தீப் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இடையேயான முக்கியமான கூட்டணி,  இந்தியா ஃபாலோ அன் பெறுவதை தடுத்தது. 


குறுக்கிடும் மழை:


ஆகாஷ் தீப் மற்றும் பும்ராவின் கூட்டணி மட்டுமின்றி, வானிலையும் ஆஸ்திரேலியாவின் வெற்றியை தட்டி பறித்துள்ளது. ஜோஷ் ஹேசில்வுட்டின் காயம் அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காயம் காரணமாக அவர் தொடரிலிருந்தே வெளியேறியுள்ளார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர்.