ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கபாவில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்தியா ஃபாலோ-ஆனைத் தவிர்த்ததை அடுத்து விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் உற்சாகமாக கொண்டாடினர்.


பும்ரா அடித்த பவுண்ட்ரியை பார்த்து விராட் கோலியும் கம்பீரும் உற்சாகத்தில் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. 


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நியூசிலாந்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியில் வென்று அசத்தியது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் 1 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா சமன் செய்தது. 






இதைத்தொடர்ந்து 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில்  444 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடி வரும் இந்திய அணி சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஜெய்ஸ்வால், கில், கோலி, ரோகித், பண்ட் என அனைத்து நம்பிக்கை நட்சத்திரங்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி கொண்டிருந்தனர். தனிப்பெரும் படையாக விளையாடிய கே.எல்.ராகுல் 84 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து பொறுப்பான ஆட்டத்தை ஆடிய ஜடேஜா அரைசதம் அடித்தார். 77 ரன்கள் எடுத்த ஜடேஜாவை ஆஸ்திரேலியா தூக்கியது. 


இதையடுத்து 10வது விக்கெட் ஜோடியான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், நான்காவது நாள் ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் ஃபாலோ-ஆன் செய்வதைத் தவிர்த்து, இந்தியா தோல்வியின் அபாயத்தை தாண்டியது. ஃபாலோ ஆனை தவிர்த்த போது விராட் கோலி, ரோகித், கம்பீர் ஆகியோர் கைத்தட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. 


ஆகாஷ் மற்றும் பும்ரா நிதான ஆட்டத்தை ஆடி இந்திய அணி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர். ஃபாலோ ஆன் மூலம் இந்தியா தொடர்ந்து பேட்டிங் செய்திருந்தால் மிகுந்த நெருக்கடியை சந்தித்திருக்கும். ஆனால் பும்ரா, ஆகாஷ் தீப் ஜோடி ஆஸ்திரேலிய பவுலர்களை திணறடித்து இந்திய ரசிகர்களுக்கு விருந்து அளித்தனர். 






4வது ஆட்டத்தின் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்துள்ளது. ஆகாஷ் தீப் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 27 ரன்களுடனும், பும்ரா ஒரு சிக்சருடன் 10 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். முடிவு என்ன என்பதை நாளைய ஆட்டம் தீர்மானிக்கும்.