இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அசத்தலாக விளையாடி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அசத்தலாக விளையாடி வெற்றி பெற்றது. இதன்காரணமாக 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமமாக உள்ளது. 


இந்நிலையில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இன்றைய போட்டியில் புவனேஷ்வர் குமார் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ரிஷப் பண்ட் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. 


இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை சூர்யகுமார் யாதவ் அசத்தி வருகிறார். இவர் தொடர்ந்து சிறப்பாக ரன்களை குவித்து வருகிறார். அதேபோல் ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் அசத்தி வருகிறார். கடந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து ஒரளவு ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். இதனால் இந்திய அணியின் பேட்டிங் இந்தப் போட்டியில் சிறப்பாக அமையும் என்று கருதப்படுகிறது. 


ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அந்த அணியின் பேட்டிங் சிறப்பாக உள்ளது. எனினும் பந்துவீச்சில் அனுபவ வீரர் கம்மின்ஸ் சொதப்பி வருகிறார். இதன்காரணமாக ஆஸ்திரேலிய அணி விக்கெட் எடுக்க தடுமாறி வருகிறது. ஆடெம் ஸம்பா மட்டும் சுழற்பந்துவீச்சில் கலக்கி வருகிறார். அவருடைய பந்துவீச்சு இந்திய வீரர்களுக்கு சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


பாகிஸ்தானை முந்துமா இந்தியா?


இந்திய கிரிக்கெட் நடப்பு ஆண்டில் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. நடப்பு ஆண்டில் இந்திய அணி தற்போது வரை நடப்பு ஆண்டில் 20 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தன்னுடைய 21 போட்டியில் வெற்றி பெறும். இந்திய அணியை போல் பாகிஸ்தான் அணியும் தற்போது வரை 20 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்று பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தால் இந்திய அணி பாகிஸ்தானை முந்தி 21 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடிக்கும். 


இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தற்போது வரை 24  டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் இந்திய அணி 14 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் இந்தியாவில் நடைபெற்றுள்ள போட்டிகளில் இந்திய அணி 5 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 


டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் களமிறங்குகிறது. எனவே டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு இந்த இரண்டு தொடர்களும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.