ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வருகிறது. 


 அதன்படி, கடந்த நவம்பர் 24-ஆம் தேதி  விசாகபட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.


அதேபோல், நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.


அதிரடியாக விளையாடிய இந்தியா:


இந்நிலையில், மூன்றாவது  போட்டி இன்று (நவம்பர் 28) அசாம் மாநிலத்தில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி , இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களம் இறங்கினார்கள். 6 பந்துகள் களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரி மட்டும் அடித்தார்.


பின்னர் 6 ரன்களில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் பந்தில் மேத்யூ வாடேயிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்து நடையைக் கட்டினார். மறுபுறம் ருதுராஜ் பொறுமையாக விளையாட  அடுத்து வந்த இஷான் கிஷான் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்க 5 பந்துகளில் அவுட் ஆனார்.


அதன்படி, கேன் ரிச்சர்ட்ஸ்சன் வீசிய பந்தில் மர்க்குஸ் ஸ்டோனிஷிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பின்னர், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சொதப்பிய சூர்யகுமார் யாதவ், இந்த போட்டியில் அதிரடியாக விளையாடினார். 


ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் 29 பந்துகள் களத்தில் நின்று 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 39  ரன்கள் குவித்தார். இதனிடையே தொடக்க வீரராக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடினார். பின்னர், வந்த திலக் வர்மா தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


சதம் விளாசிய ருதுராஜ்:


மறுபுறம் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 52 பந்துகள் 102 ரன்களை எடுத்தார். கடைசி வரை களத்தில் நின்ற அவர் 57 பந்துகளில் 123 ரன்களை குவித்தார். இவ்வாறாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. தற்போது 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது.