இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு 237 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
ரோகித் சர்மா சதம்:
இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன்கில் - ரோகித் சர்மா நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். கடந்த போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் நம்பிக்கை அடைந்த ரோகித் சர்மா இந்த போட்டியில் பவுண்டரிகளை இயல்பாக விளாசினார். சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார்.
அவர் 105 பந்துகளில் 11 பவுண்டரி 2 சிக்ஸருடன் 100 ரன்களை விளாசினார். ரோகித் சர்மாவிற்கு ஒருநாள் கிரிக்கெட்டில் இது 33வது சதம் ஆகும். மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அவரது 9வது சதம் இதுவாகும்.
கேப்டன்சி பறிப்பு:
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு 2027 உலகக்கோப்பை வரை இந்திய அணியின் கேப்டனாக ரோகித்சர்மாவே இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலிய தொடருக்கான கேப்டன்சி ரோகித்சர்மாவிடம் இருந்து பறிக்கப்பட்டு சுப்மன்கில்லிடம் வழங்கப்பட்டது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் சொதப்பிய பிறகு சுமார் 6 மாதத்திற்கு பிறகு மீண்டும் அணிக்கு ரோகித்சர்மா திரும்பினார். முதல் போட்டியில் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாக இரண்டாவது போட்டியில் அரைசதம் விளாசினார்.
நம்பிக்கை தந்த கோலி:
இந்த நிலையில், இந்த போட்டியில் களமிறங்கியது முதலே தன்னுடைய இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் எல்லீஸ், கன்னுல்லி, ஜம்பா என அந்த அணியின் ஆஸ்தான பந்துவீச்சாளர்கள் வீசியும் அவர்களால் ரோகித் சர்மாவை கட்டுப்படுத்த இயலவில்லை.
மறுமுனையில் அவருக்கு முன்னாள் கேப்டனும் மற்றொரு நட்சத்திர வீரருமான விராட் கோலியும் ஒத்துழைப்பு அளிக்க நம்பிக்கை மேலும் அதிகரித்தது. ரோகித்சர்மா - விராட் கோலியின் அபாரமான பேட்டிங்கால் ஆட்டம் இந்திய அணியின் வசமே இருந்தது. இந்த சூழலில், சிறப்பாக ஆடி ரோகித் சர்மா சதம் விளாசினார்.
ஓய்வு கேட்டவர்களுக்கு பதிலடி:
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் 2027ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆட ஆர்வம் காட்டவில்லை என்று அஜித் அகர்கர் கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், கம்பீரும் முன்னாள் கேப்டன்கள் ரோகித் மற்றும் விராட் கோலி ஓய்வு பெற அழுத்தம் தருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. அவர்களுக்கு பதிலடி தரும் விதமாகவே இன்று ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார்.