இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா மீண்டும் 6 மாதத்திற்கு பிறகு இந்திய அணிக்குத் திரும்பியதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

Continues below advertisement

ஒயிட்வாஷா? ஆறுதல் வெற்றியா?

ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடுத்தடுத்த 2 போட்டிகளையும் இழந்து இந்திய அணி தொடரை இழந்துள்ளது. விராட் கோலி அடுத்தடுத்து டக் அவுட்டானது ரசிகர்களை மிகவும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் இந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. 

சிட்னி மைதானத்தில் நாளை நடக்கும் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா? அல்லது தொடரை முழுமையாக இழந்து ஒயிட்வாஷ் ஆகுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்திய அணியைப் பொறுத்தமட்டில் டாப் ஆர்டர்கள் நிலைத்து நிற்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. 

Continues below advertisement

பேட்டிங்கில் பலம் பெறுமா இந்தியா?

கேப்டன் சுப்மன்கில் முதல் 2 போட்டியில் பெரிதும் அசத்தவில்லை. அவர் கடைசி ஒருநாள் போட்டியில் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். ஏனென்றால் அவர் சிறப்பாக ஆடுவது அணிக்கு மட்டுமின்றி அவரது கேப்டன்சி மீதான நம்பிக்கையையும் அணிக்கும், ரசிகர்களுக்கும் அளிக்கும். முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். 

மிடில் ஆர்டரில் கடந்த போட்டியில் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடினால் இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டும். அக்ஷர் படேல் இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடுவார் என்று நம்பப்படுகிறது. பின்வரிசையில் வரும் கே.எல்.ராகுல் தனது அதிரடியை காட்ட வேண்டியது அவசியம் ஆகும்.  பின்வரிசையில் வரும் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி சிறப்பாக ஆட வேண்டும்.

ஆஸ்திரேலியா பேட்டிங்:

அந்த அணியின் கேப்டன் மார்ஷ் பேட்டிங்கில் பலமாக உள்ளார். ட்ராவிஸ் ஹெட் கடந்த 2 போட்டியில் சிறப்பாக ஆடவில்லை. கடைசி ஒருநாள் போட்டியிலும் அவரை விரைவில் அவுட்டாக்க வேண்டியது அவசியம் ஆகும். மிடில் ஆர்டரில் மேத்யூ ஷார்ட், ரென்ஷா, கன்னுல்லி உள்ளனர். கடந்த போட்டியில் கன்னுல்லி ஆட்டத்தை ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக மாற்றினார். 

பந்துவீச்சு நிலவரம்:

ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சுக்கு பலமாக ஸ்டார்க், ஹேசில்வுட் உள்ளனர். இவர்களுடன் பார்ட்லெட், ஆடம் ஜம்பா  உள்ளனர். ஷார்ட், கன்னுல்லியும் பந்துவீசுவது அவர்களுக்கு பலமாகும். 

இந்திய அணியைப் பொறுத்தமட்டில் முகமது சிராஜ், அர்ஷ்தீப்சிங் பந்துவீச்சில் பலமாக உள்ளார். ஹர்ஷித் ராணா விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் ரன்களை வாரி வழங்குகிறார். அவர் அணியில் இடம்பிடிக்கும் நிலையில் அவர் சிறப்பாக வீச வேண்டியது அவசியம் ஆகும். அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர் சுழலில் கலக்குவது இந்திய அணிக்கு தேவையான ஒன்றாக மாறியுள்ளது. குல்தீப் அணியில் இடம்பிடித்தால் அவர் முக்கிய துருப்புச்சீட்டாக இருப்பார் என்று கருதப்படுகிறது. 

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

இந்திய அணி கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது. தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரையும் 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகினால் இந்திய அணிக்கு சிக்கலாக மாறிவிடும். இதனால், தொடரை இழந்தாலும் ஆறுதல் வெற்றி பெற இந்திய அணி முனைப்பு காட்டும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்த போட்டி நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் நேரலையில் காணலாம்.