சென்னை சேப்பாக்கத்தில் நாளை இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள்  கிரிக்கெட் போட்டிக்காக ரசிகர்களுக்கு இலவச மினி பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. 


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் நாளை ஒருநாள் மட்டு, மினி பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சேப்பாக்கம் மைதானம் வரை மெட்ரோ பயணிகளுக்கு மினி பஸ் சேவையை மெட்ரோ நிர்வாகம் நாளை ஒருநாள் வழங்கியுள்ளது. மேலும் நெரிசல் மிகு நேரமாக கருதப்படும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை என்ற கணக்கீடு இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இலவச மினி பஸ் வசதியை இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த இலவச மினி பஸ் சேவை நாளை 11:00 மணி ஒரு நாள் மட்டும் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது,


இது குறித்து சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:-


இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தருவார்கள். இதற்காகவே சென்னை மெட்ரோ இரயில் அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் எம். சிதம்பரம் மைதானம் வரை இலவசமாக மினி பஸ் சேவை வசதியை நாளை காலை 11:00 மணி முதல் கிரிக்கெட் போட்டி முடியும்வரை கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே செய்துள்ளது,


22-03-2023, அன்று மட்டும் மெட்ரோ இரயில் சேவை நெரிசல்மிகு நேரமான மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை உள்ள நெரிசல்மிகு நேரத்தை இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இந்த தருணத்தில், சென்னை மெட்ரோ இரயில் வாகனநிறுத்தும் இடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். சென்னை பெருநகர மக்களும், கிரிக்கெட் ரசிகர்களும், பொதுமக்களும், மெட்ரோ இரயில் நிர்வாகம் செய்துள்ள இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ரெக்கார்ட்ஸ்:


இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் (IND vs AUS) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் தற்போது இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. இந்த நிலையில் இந்த கடைசி போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது. இதன் மூலம், இந்த மைதானத்தில் இரு அணிகளின் கடந்த கால புள்ளிவிவரங்களைப் பார்த்தால், ஆஸ்திரேலியா அணி பலமாகத் தெரிகிறது.


சேப்பாக்கத்தில் இதுவரை 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 7ல் வெற்றியும், 5ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு போட்டியும் முடிவடையவில்லை. அதாவது, இந்த மைதானத்தில் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 58.33 ஆக உள்ளது. மறுபுறம், ஆஸ்திரேலிய அணி இங்கு 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த 5ல் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்துள்ளார். அதாவது, இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதம் 80 ஆக உள்ளது. இங்கு இந்தியா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து ஆகிய அணிகளை ஆஸ்திரேலியா தோற்கடித்துள்ளது.


இந்தியா-ஆஸ்திரேலியா இடையே சேப்பாக்கத்தில் இரண்டு போட்டிகள் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா  ஒரு முறையாகவும், இந்திய அணி ஒரு முறையாகவும் வெற்றி பெற்றன. இந்த மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் போட்டி நடைபெற்றது. 1987 அக்டோபரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 30 ஆண்டுகளுக்கு பிறகு 2017 செப்டம்பரில் இவ்விரு அணிகளும் மோதிய போது இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.