இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிய முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
பகலிரவு டெஸ்ட்:
இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் அடுத்த டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகின் புகழ்பெற்ற மற்றும் பழமையான மைதானமாக அடிலெய்ட் ஓவல் மைதானம் திகழ்கிறது. இந்த மைதானத்தில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக வரும் 6ம் தேதி தொடங்க உள்ளது. சிவப்பு பந்தில் போட்டி நடைபெறாமல் பிங்க் நிற பந்தில் இந்த டெஸ்ட் போட்டி நடைபெறும்.
அடிலெய்ட் மைதானம் எப்படி?
நூற்றாண்டுகளை கடந்த இந்த அடிலெய்ட் ஓவல் மைதானம் 1871ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த மைதானத்தில் மொத்தம் 53 ஆயிரத்து 583 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். ஓவல் மைதானத்தில் இதுவரை 85 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணி 41 முறை வெற்றி பெற்றுள்ளது. முதலில் பந்துவீசிய அணி 24 முறை வெற்றி பெற்றுள்ளது.
இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 379 ரன்கள் ஆகும். இரண்டாவது இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 346 ரன்கள் ஆகும். 3வது இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 268 ரன்கள் ஆகும். 4வது இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 208 ரன்கள் ஆகும்.
அதிக, குறைந்த ரன்கள்:
இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 674 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது. 1948ம் ஆண்டு நடைபெற்ற அந்த போட்டியில் ப்ராட்மேன் இரட்டை சத உதவியுடன் ஆஸ்திரேலியா 674 ரன்களை எடுத்தது. அந்த போட்டியில் இந்தியா முதல் இனனிங்சில் 381 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 277 ரன்களும் எடுத்தும் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்தியாவிற்காக விஜய் ஹசாரே இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசினார்.
இந்த மைதானத்தில் குறைந்த பட்சமாக 2022ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 77 ரன்களுக் ஆல் அவுட்டாகியதே குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். கடைசியாக இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணி மோதிய டெஸ்ட் போட்டி நடைபெற்றுள்ளது.
கோலிக்கு எப்படி?
இந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் அதிகபட்சமாக 1743 ரன்கள் எடுத்துள்ளார். இந்த மைதானத்தில் மட்டும் அவர் 6 சதங்கள் விளாசியுள்ளார். விராட் கோலி இந்த மைதானத்தில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள் 1 அரைசதத்துடன் 509 ரன்கள் எடுத்துள்ளார். அதகபட்சமாக 141 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் இந்த மைதானத்தில் 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 650 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 1 சதம், 4 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் எடுத்துள்ளார். லபுஷேனே இந்த மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 1 அரைசதத்துடன் 574 ரன்கள் எடுத்துள்ளார்.
வெற்றி நெருக்கடி:
இந்த மைதானத்தில் அதிகபட்சமாக நாதன் லயன் 13 போட்டிகளில் ஆடி 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஸ்டார்க் 13 போட்டிகளில் ஆடி 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பகலிரவு டெஸ்ட் போட்டியாக பிங்க் பந்தில் நடக்கும் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த போட்டியிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.