Champions Trophy: பாகிஸ்தான் ஹைப்ரிட் மாடலுக்கு சம்மதம் தெரிவிக்காவிட்டால்,  சாம்பியன்ஸ் டிராபி வேறுநாட்டில் நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.


சாம்பியன்ஸ் டிராபி விவகாரம்:


அடுத்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நாட்டிற்கு செல்ல முடியாது என இந்திய அணி அறிவித்தது. இதன் காரணமாக போட்டியை ஹைப்ரிட் முறையில் நடத்த திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக விவாதிக்க அண்மையில் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



ஹைப்ரிட் முறைக்கு ”நோ” சொன்ன பாகிஸ்தான்


ஆலோசனைக் கூட்டத்தின் போது தற்போதையை சூழலில், ஹைப்ரிட் முறையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை நடத்துவதே சிறந்த முடிவாக இருக்கும் என பெரும்பாலான உறுப்பு நாடுகள் வல்யுறுத்தியுள்ளன. ஆனால், பாகிஸ்தான் அதனை ஏற்க மறுத்ததோடு, மொத்த போட்டிகளையும் தங்கள் நாட்டிலேயே நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கு, ஒருவேளை ஹைப்ரிட் முறையில் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் சம்மதிக்காவிட்டால், போட்டிகளை நடத்தும் முழு உரிமையும் வேறுநாட்டிற்கு வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தானின் முடிவு என்ன?


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் அறிவிப்பை தொடர்ந்து, தங்கள் நாட்டு அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்க பாகிஸ்தான் ஒருநாள் அவகாசம் கோரியது. அதனடிப்படையில், ஐசிசியின் ஆலோசனைக் கூட்டம் இன்று மீண்டும் கூற உள்ளது. நெருக்கடியான சூழலுக்கு மத்தியிலும், தங்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர், பாகிஸ்தான் ஹைப்ரிட்  மாடலுக்கு ஒப்புக்கொள்ளும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு ஒரு தீர்மானத்திற்கு வழி வகுக்கும் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான சில ஹோஸ்டிங் உரிமைகளை பாகிஸ்தான் தக்கவைத்துக்கொள்வதை உறுதிசெய்யும். 


சாத்தியமான சூழல்:


ஹைப்ரிட் மாடலுக்கு பாகிஸ்தான் ஒப்புக்கொள்கிறது: இந்தியாவின் போட்டிகள், ஒரு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி துபாயில் நடைபெறும். மீதமுள்ள போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும். அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஹோஸ்டிங் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளும்.


ஹைப்ரிட் மாடலை பாகிஸ்தான் நிராகரிக்கிறது: பாகிஸ்தான் இந்த திட்டத்தை மறுத்தால், ஐசிசி வாரியம் அவர்களின் நிலைப்பாட்டை எதிர்த்து வாக்களிக்கலாம். PCB பிடிவாதமாக இருந்தால், அவர்களின் ஹோஸ்டிங் உரிமைகள் ரத்து செய்யப்பட்டு மூன்றாம் நாட்டிற்கு வழங்கப்படலாம். இதனால் பாகிஸ்தான் போட்டியை முற்றிலுமாக புறக்கணிக்க வாய்ப்புள்ளது.


தொடரும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை:


கடந்த 2021ம் ஆண்டு ஒருநாள் சாம்பியன்ஸ் டிராபிய வென்றதை தொடர்ந்து,  2025 க்கான ஹோஸ்டிங் உரிமையை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மூன்று மைதானங்களை புதுப்பிக்கத் தொடங்கியது. ஆனால், இந்த முறையும் பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்தியா எல்லை தாண்டி பயணிக்க மறுத்ததையடுத்து, கடந்த ஆண்டு பாகிஸ்தான் நடத்திய ஆசிய கோப்பை போட்டி கூட ஹைபிரிட் மாடலில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


2008 ஆசிய கோப்பைக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடவில்லை. 2012-13 சீசனில் இருந்து இரு அணிகளும் இருதரப்பு கிரிக்கெட்டில் விளையாடவில்லை. சாம்பியன்ஸ் டிராபி என்பது ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களில் விளையாடும் எட்டு அணிகள் கொண்ட போட்டியாகும். லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி, கடந்த முறை பாகிஸ்தான் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.