Rohit Sharma IND Vs Aus 2nd ODI : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா தனது 59வது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

Continues below advertisement

கவிழ்த்துவிட்ட ”கிங்”

டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கிங் கோலி மற்றும் ஹிட்மேன் ரோகித் சர்மா ஆகியோர், 7 மாத இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் மூலம் களத்திற்கு திரும்பியுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் போட்டியில் ரோகித் 8 ரன்களுக்கும், கோலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இதனால், இரண்டாவது போட்டியிலாவது அசத்துவார்களா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது போட்டியிலும் கோலி டக்-அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் டக்-அவுட் ஆவது கோலிக்கு இதுவே முதல்முறையாகும்.

Continues below advertisement

மாஸ் காட்டிய ரோகித்

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ரோகித் சர்மா, ஆரம்பித்தில் சற்றே தடுமாறினாலும் பின்பு நிதானமாக ரன் சேர்க்க தொடங்கினார். சீரான இடைவெளியில் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினார். ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்துவீச்சு, பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லாத ஆடுகளம் ஆகியவற்றை உணர்ந்து பொறுப்பாகவும் செயல்பட்டார். இதனால் ஸ்ரேயாஸ் அய்யருடன் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டு, ரன் ரேட்டை கூட்டினார். அதன் விளைவாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 59வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து, 73 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

ரோகித்தின் அரிய சாதனை:

இதனிடையே, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளில், ஆஸ்திரேலியா மண்ணில் ஆயிரம் ரன்களை சேர்த்த முதல் இந்தியர் என்ற அரிய சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். அதன்படி 21 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்கள், 2 சதங்கள் பதிவு செய்துள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள கோலி 802 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஏற்கனவே, விவியன் ரிச்சர்ட்ஸ், தேஷ்மொண்ட் ஹெய்னஸ், குமார் சங்ககாரா மற்றும் ஜெயவர்தனே ஆகியோர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்த ஊரிலேயே நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை சேர்த்துள்ளனர்.

இடத்தை உறுதி செய்யும் ரோகித்..!

சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், 2027ம் ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கிலேயே தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் கோலி மற்றும் ரோகித் விளையாடி வருகின்றனர். இந்த முடிவினை அறிவித்த பிறகு இருவரும் பங்கேற்கும் முதல் சர்வதேச தொடர் இதுவாகும். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டு போட்டிகளிலும் கோலி டக்-அவுட்டாகி அதிர்ச்சி அளித்துள்ளார். அதேநேரம், முதல் போட்டியில் சொதப்பினாலும் இரண்டாவது போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரோகித் சர்மா 73 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதே ஃபார்மை தொடர்ந்தால், 2027ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ரோகித் நிச்சயம் இடம்பெறக்கூடும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.