இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஏற்கனவே நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தூரில் தொடங்கிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச முடிவு செய்தார். 


இந்திய அணியிலும் ஆஸ்திரேலிய அணியிலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ், தொடக்க ஆட்டக்காரர் மிட்ஷெல் மார்ஷ் மற்றும் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, பந்து வீச்சாளர்கள் ஹாசல் வுட் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். அதேபோல் இந்திய அணியில் பும்ராவிற்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார். 


இந்திய அணியின் இன்னிங்ஸை ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் தொடங்கினர். இதில் ருத்ராஜின் விக்கெட்டினை போட்டியின் 4வது ஓவரில் ஹசில்வுட் கைப்பற்ற, அதன் பின்னர் கில்லுடன் ஸ்ரேயஸ் ஐயர் கரம் கோர்த்தார். இருவரும் சிறப்பாக விளையாடியது மட்டும் இல்லாமல் பொறுப்புடனும் விளையாடினர். 


இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தினை கடந்து ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சினை துவம்சம் செய்து வந்தனர். குறிப்பாக ஓவருக்கு குறைந்த பட்சம் ஒரு பவுண்டரியாவது அடிக்க வேண்டும் என்ற மனநிலையில் சிறப்பாக விளையாடினர். இவர்களின் விக்கெட்டினைக் கைப்பற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தனது அணியில் இருந்த டாப் பவுலர் தொடங்கி பகுதி நேர பந்து வீச்சாளர் வரை அனைவரையும் பயன்படுத்திப் பார்த்துவிட்டார். ஆனால் இவர்களின் கூட்டணியை பிரிக்க முடியவில்லை. 


அதிரடியாக ஆடிவந்த இருவரும் 90களை எட்டியப் பின்னர் சதத்தினை குறிவைத்து பொறுமையாக ஆடி வந்தனர். இதனால் போட்டியில் 5 முதல் 8 ஓவர்கள் பவுண்டரி எதுவும் போகாமல் இருந்தது. அதன் பின்னர் இருவரும் தங்களது சதத்தினை அடுத்தடுத்து பூர்த்தி செய்தனர். இதில் ஸ்ரேயஸ் ஐயர் 90 பந்துகளில் 11 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி 105 ரன்கள் சேர்த்த நிலையிலும், கில் 97 பந்தில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் விளாசி 104 ரன்கள் சேர்த்த நிலையிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 


அதன் பின்னர் கை கோர்த்த கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் முதலாவது ஒருநாள் போட்டியைப் போல் அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக சூர்யா ஆஸ்திரேலிய அணியின் க்ரீனின் 42வது ஓவரின் முதல் 4 பந்தில் 4 சிக்ஸர்கள் விளாசி அமர்க்களப்படுத்தினார். 


இதையடுத்து கே.எல். ராகுல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேற, இந்திய அணியை 400 ரன்களை நோக்கி கொண்டு செல்ல சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டிவந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 72 ரன்னிலும் ஜடேஜா 13ரன்னிலும் இறுதிவரை களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் க்ரீன் 10 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்டுகள் கைப்பற்றி 103 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.