இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 


இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்காக இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (மார்ச் 19) மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 117 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆனது. இதன் பின்னர் களமிறங்கிய  ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடியது, தொடக்க ஆட்டக்காரர்களான டேவிஸ் ஹெட் மற்றும் மிட்ஷெல் அதிரடியாக ஆடினர். மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாச்சிய வண்ணம் இருந்தனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தனது அணியில் இருந்த பந்து வீச்சாளர்களில் ஐந்து பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார். ஆனால், சிறந்த பார்மில் இருந்த மிட்ஷெல்  மார்ஷ் மற்றும் டேவிஸ் ஹெட் இருவரும் தங்களது அதிரடியை குறைக்க வில்லை. 


இறுதியில், 11 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவிஸ் ஹெட் 51 ரன்களும், மிட்ஷெல் மார்ஸ் 66 ரன்களும் எடுத்து இருந்தனர்.  


முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் முதல் அதிர்ச்சி காத்து இருந்தது. மின்னல் வேகத்தில் பந்துகளை வீசிய மிட்ஷெல் ஸ்டார்க் இந்திய அணியின் தொடக்க வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார். குறிப்பாக சுப்மன் கில்லை முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் டக் அவுட் ஆக்கினார். இங்கு தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடியும் வரை இருந்தது. இதனால், இந்திய அணி வீரர்கள் மைதானத்துக்குள் வருவதும் போவதுமாகவே இருந்தனர்.  இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து117  ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்ஷெல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும், அப்பேட் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.


இதேபோல், கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஆகியோரின் சதங்களால் ஆஸ்திரேலியா 256 ரன்களை துரத்தியது. வார்னர் 128 ரன்களும், பின்ச் 110 ரன்களும் எடுத்தனர், ஆஸ்திரேலியா வெறும் 37.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 258 ரன்களை எடுக்க உதவியது.  


முதலில் பேட் செய்த இந்தியா 49.1 ஓவரில் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 74 ரன்களும், கேஎல் ராகுல் 47 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பிஜேகம்மின்ஸ் மற்றும் கேடபிள்யூ ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.