இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு அவுட்டானது.
பால் பாய் தலையை பதம் பார்த்த கோலி சிக்ஸ்:
இதையடுத்து, இந்திய அணி 2வது இன்னிங்சில் ஆடி வருகிறது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் விராட் கோலிக்கு பவுன்சர் ஒன்றை வீசினார். அந்த பந்தை லாவகமாக எதிர்கொண்ட விராட் கோலி அப்பர் கட் ஷாட் ஆடி அபாரமான ஒரு சிக்ஸர் விளாசினார். அந்த பந்து அங்கே அமர்ந்திருந்த பால் பாயின் தலையில் பட்டது.
அதிர்ஷ்டவசமாக அந்த பந்து எல்லைக்கோட்டின் மீது விழுந்த பிறகே பால் பாய் மீது பட்டது. இதனால், பந்தின் வேகம் குறைந்ததால் அவருக்கு தலையில் காயம் ஏதும் ஏற்படவில்லை. பால் பாயின் தலையில் பந்து பட்டதும் உடனடியாக ஆஸ்திரேலிய வீரர் லயன் மற்றும் சில வீரர்கள் அந்த சிறுவனிடம் சென்று நலமா? என்று விசாரித்தனர். பின்னர், உடனடியாக மருத்துவ குழுவினர் அந்த சிறுவனிடம் சென்று அவரை சோதித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸி.க்கு இமாலய இலக்கு:
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 400க்கும் மேற்பட்ட ரன்கள் முன்னிலை பெற்று ஆடி வருகிறது. இந்திய அணிக்காக தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் அபாரமான தொடக்கம் அளித்தனர். ஜெய்ஸ்வால் 161 ரன்களும், கே.எல்.ராகுல் 77 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டி முடிய இன்னும் இரண்டு நாட்கள் உள்ளதால் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு 550க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்க இந்திய அணி விரும்பும்.
அப்போதுதான் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்த முடியும். மைதானம் கடந்த இரண்டு நாட்களாகவே பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியுள்ள நிலையில், கடைசி இரண்டு நாட்கள் மைதானம் பந்துவீச்சிற்கு ஒத்துழைக்குமா? அல்லது பேட்டிங்கிற்கே சாதகமாக அமையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், இந்த போட்டியின் அடுத்த 2 நாட்கள் இன்னும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.