இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இதில் இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது, இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, ஆஸ்திரேலியா 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் – ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கம் அளித்தனர்.


ஜெய்ஸ்வால் அபாரம்:


இருவரும் இணைந்து களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 172 ரன்களை எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 90 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து, 3வது நாளான இன்று ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் – ராகுல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வௌப்படுத்தினர்.


ஹேசில்வுட் பந்தில் சிக்ஸர் அடித்து ஜெய்ஸ்வால் தனது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் சதம் அடித்த சிறிது நேரத்தில் ராகுல் 77 ரன்களில் அவுட்டானார். அதன்பின்பு வந்த படிக்கல்லை ஒரு முனையில் வைத்துக் கொண்டு ஜெய்ஸ்வால் தனி ஆளாக ஆஸ்திரேலிய பந்துவீச்சிற்கு ஆட்டம் காட்டினார்.


திணறிய ஸ்டார்க், கண்ணீர் விட்ட கம்மின்ஸ்:


ஓரிரு ரன்களாகவும், பவுண்டரிகளாகவும் ஜெய்ஸ்வால் விளாசினார். குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான்  பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் பந்தில் பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். ஸ்டார்க் – ஜெய்ஸ்வால் மோதலே களத்தில் பார்ப்பதற்கு தனி அழகாக இருந்தது. ஸ்டார்க்கும் தனது முழு திறனை பயன்படுத்தி பந்துவீசினாலும் அதை ஜெய்ஸ்வால் லாவகமாக பவுண்டரிக்கு விளாசிக் கொண்டிருந்தார். ஜெய்ஸ்வால் எதிர்கொண்ட பந்துகளில் பெரும்பாலும் ஸ்டார்க் வீசியதே ஆகும்.


கேப்டன் கம்மின்ஸ் அவர் பந்துவீசியது மட்டுமின்றி ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், லயன், லபுஷேனே, டிராவிஸ் ஹெட் என பலரையும் பயன்படுத்தினார். அனைவருக்கும் தண்ணி காட்டிய ஜெய்ஸ்வால் 150 ரன்களையும் மிக எளிதாக கடந்தார். இறுதியில் மிட்செல் மார்ஷ் பந்தில் பவுண்டரி அடிக்க முயற்சித்தபோது ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜெய்ஸ்வால்.


மறக்க முடியாத 161 ரன்கள்:


297 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் 15 பவுண்டரி 3 சிக்ஸருடன் 161 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். நேற்று மதியம் முதல் இன்று மதியம் வரை என சுமார் 1 நாள் களத்தில் முழுவதும் நின்று ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்துள்ளார் ஜெய்ஸ்வால்.


கே.எல்.ராகுலுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன் எடுத்த பார்ட்னர்ஷிப், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய இடது கை வீரர், டெஸ்டில் அடித்த 4 சதங்களிலுமே 150 ரன்களுக்கு மேல் அடித்தது என்று சாதனை மேல் சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.


ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் டக் அவுட்டாகிய நிலையில் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து அசத்தியுள்ளார். பெர்த் மைதானத்தில் 3வது இன்னிங்சில் 161 ரன்களை விளாசியிருப்பதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.