ஆசிய கோப்பை தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை மொஹாலியில் நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு அணியின் வீரர்களும் தீவிரமாக வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய தொடர் தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, “எங்களை எளிதாக நினைக்க வேண்டாம். நாங்கள் இங்கு வெற்றி பெறுவதற்காக வந்துள்ளோம். எங்களுடைய அணியில் சில வீரர்கள் இல்லை. எனினும் அதற்காக எங்களை எளிதாக எடுத்து கொள்ள கூடாது.
சிறிய இடைவேளைக்கு பிறகு அணிக்கு திரும்புவதால் எனக்கு நிறைய கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று தோன்றுகிறது. அப்போது தான் நான் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நல்ல ஃபார்மிற்கு வரமுடியும் என்று கருதுகிறேன். இந்த ஓய்வு என்னுடைய உடம்பு மற்றும் மனம் புத்துணர்ச்சி பெற உதவியுள்ளது. ஆகவே மீண்டும் களத்தில் பந்துவீச ஆவலாக உள்ளேன்.
நாளைய போட்டியை பொறுத்தவரை டிம் டேவிட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும். அவர் நடுகள ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக அசத்தி வருகிறார். பொதுவாக டாப் ஆர்டர் மற்றும் தொடக்க ஆட்டக்காரர்கள் டி20யில் அதிக ரன்கள் குவிப்பார்கள். ஆனால் நடுகள வீரராக களமிறங்கி டிம் டேவிட் வேகமாக ரன்களை குவித்து வருகிறார். அது அணிக்கு கூடுதல் பலமாக அமையும். அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் படசத்தில் அவர் சிறப்பாக விளையாடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் சிறிய ஓய்விற்கு பிறகு களமிறங்குகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜிம்பாவே மற்றும் நியூசிலாந்து தொடர்களில் பங்கேற்கவில்லை. கடைசியாக இவர் ஜூலையில் இலங்கையில் நடைபெற்ற தொடரில் பங்கேற்றார். அதன்பின்னர் சிறிய ஓய்வை எடுத்து வந்தார். இந்தச் சூழலில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய தொடரில் இவர் அணிக்கு திரும்பியுள்ளார். இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் மார்ஷ், மார்கஸ் ஸ்டியோனிஸ், மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அத்துடன் முன்னணி வீரர் டேவிட் வார்னர் ஓய்வு வேண்டும் என்று கூறி இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் களமிறங்குகிறது. எனவே டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு இந்த இரண்டு தொடர்களும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.