இந்த நாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா..? எந்த ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத தினம். அப்படி என்ன ஸ்பெஷல் டே என்று நீங்கள் கேட்டா அதற்கான பதில் இதோ..
2007 செப்டம்பர் 19 இந்திய கிரிக்கெட் வீரர் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை ஓடவிட்டு, ஒட்டுமொத்த உலகமும் தன்னை உற்றுநோக்க செய்தவர். ஆம், உங்கள் யூகம் சரிதான் யுவராஜ் சிங்! அந்த ஒற்றை சிங்கம் 6 சிக்ஸர்களை கெத்தாக பறக்கவிட்ட நாள்தான் இன்று.
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாகவும், ஆல்ரவுண்டராகவும் வலம் வந்தவர் யுவராஜ்சிங். இந்திய அணியின் மேட்ச் வின்னராக பல போட்டிகளில் வலம் வந்தவர். 2007 உலககோப்பை தோல்விக்கு பிறகு டிராவிட் இந்திய அணியின் கேப்டன்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, யுவராஜ்சிங்தான் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் தோனி கேப்டனாக்கப்பட்டார். இருப்பினும், தோனியுடன் சேர்ந்த பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றிய இரண்டு உலக கோப்பைகளிலும் யுவராஜ்சிங்தான் முக்கிய பங்காற்றினார். 2011ம் ஆண்டு உலகக் கோப்பையிலும் இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்து கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக வலம்வந்தார். அதேபோல, 2007ம் ஆண்டு டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ்சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்ததை யாராலும் மறக்கவே முடியாது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 19) நினைவுக்கூர்ந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் #YuvarajSingh என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மட்டும் யுவராஜ் சிங் அசைக்க முடியாத 3 சாதனைகளை படைத்தார்.
அதிவேக அரைசதம்:
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கிய யுவராஜ் சிங் இன்றைய நாளில் 12 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். T20I போட்டியில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆண்கள் டி20 போட்டிகளிலும் அடித்த அதிவேக 50 ரன் இதுவாகும்.
ஒரே ஓவரில் அதிக ரன்கள்:
யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்தார். அந்த ஓவரில் 36 ரன்கள் எடுத்தார். சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஓவரில் எடுக்கப்பட்ட அதிக ரன்கள் என்ற சாதனை இதுவாகும்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த ஒரே இந்தியர்:
ரவி சாஸ்திரி மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இரு இந்தியர்கள் மட்டுமே ஒரு ஓவரில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்துள்ளனர். ஆனால் சாஸ்திரியின் சாதனை உள்நாட்டு முதல்தர போட்டியில் நடந்தது. இதையடுத்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமை யுவராஜ் சிங்கிடம் உள்ளது, மேலும், டி20 உலகக் கோப்பை போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்த உலகின் ஒரே வீரர் யுவராஜ் மட்டுமே.