IND vs AUS 1st T20 Match Highlights: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.


இந்திய அணிக்கு ஷாக்..!


ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்த 209 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் எதிர்பாராதவிதமாக, ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் ரன்-அவுட் ஆனார். சிறிது நேரம் அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஷ்வால், 8 பந்துகளில் 21 ரன்களை சேர்த்து நடையை கட்டினார். இதனால், 22 ரன்களை  சேர்ப்பதற்குள் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


சூர்யகுமார் - இஷான் கிஷன் அதிரடி: 


இருப்பினும் 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன், 3வது விக்கெட்டிற்கு பொறுப்புடன் ஆட ஆரம்பித்தனர். இருப்பினும், சீரான இடைவெளியில் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினர். இதன் மூலம் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. வெறும் 39 பந்துகளில் 58 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார் இஷான் கிஷன். இதில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும். மறுமுனையில், இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே, சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் விளாசினார். இதனிடையே, திலக் வர்மா வெறும் 12 ரன்களில் நடையை கட்டினார்.


இந்திய அணி வெற்றி:


5வது விக்கெட்டிற்கு கேப்டனும் ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். இதனால், அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் ஆஸ்திரேலியா பந்துவீச்சை சிதறடித்தார். அதிரடியாக விளையாடி வந்த அவர் 80 ரன்களில் சேர்த்து இருந்தபோது, ஹெஹ்ரண்ட்ரோப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்ததால், போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இருப்பினும் ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. 19.5 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்ட, ரிங்கு சிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 28 ரன்களை குவித்தார்.


முதல் இன்னிங்ஸ் சுருக்கம்:


விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 5 போட்டிகள்கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மேத்யூ ஷார்ட் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இரண்டாவது விக்கெட்டிற்கு ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த, இங்லிஷ் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதன் மூலம் வெறும் 29 பந்துகளிலேயே அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். தொடர்ந்து, 52 ரன்களை சேர்த்து இருந்தபோது ஸ்மித் ரன் - அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டிற்கு இங்லிஷ் - ஸ்மித் கூட்டணி 130 ரன்களை சேர்த்தது குற்ப்பிடத்தக்கது.


மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்லிஷ், 47 பந்துகளில் சதம் விளாசினார். டி-20 போட்டிகளில் அவர் விளாசிய முதல் சதம் இதுவாகும். இறுதியில் 50 பந்துகளில் 110 ரன்களை சேர்த்து, பிரஷித் கிருஷ்ணா பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டோய்னிஷ் மற்றும் டிம் டேவிட் கூட்டணியை அதிரடியாக விளையாட விடாமல், இந்திய வீரர்கள் சற்றே கட்டுப்படுத்தினர்.  இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208  ரன்களை சேர்த்தது.