IND vs AUS 1st T20 1st Innings Highlights: விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 208 ரன்களை சேர்த்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 சீரிஸ்:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அண்மையில் நடந்து முடிந்தது. அதைதொடர்ந்து, தற்போது இந்தியா - ஆஸ்திரேலிய இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூத்த வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் அணியை பிசிசிஐ களமிறக்கியுள்ளது. இதேபோன்று, ஆஸ்திரேலியா அணியும் இந்த தொடரில் மேத்யூ வேட் தலைமையில் களமிறங்கியுள்ளது. இந்த போட்டிகளின் நேரலை நியூஸ்18 ஸ்போர்ட் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
ஆஸ்திரேலியா பேட்டிங்:
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மேத்யூ ஷார்ட் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அவர்களது கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 31 ரன்களை சேர்த்தது.
இங்லிஷ் - ஸ்மித் அபாரமான பேட்டிங்:
இதையடுத்து இரண்டாவது விக்கெட்டிற்கு ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த, இங்லிஷ் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். சீரான இடைவெளியில் அடுத்தடுத்து பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினார். இதன் மூலம், வெறும் 29 பந்துகளிலேயே அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தடுமாறினார். அடுத்தடுத்து சிக்சர்களை விளாச, 15 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி 150 ரன்களை கடந்துள்ளது. தொடர்ந்து, 52 ரன்களை சேர்த்து இருந்தபோது ஸ்மித் ரன் - அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டிற்கு இங்லிஷ் - ஸ்மித் கூட்டணி 130 ரன்களை சேர்த்தது குற்ப்பிடத்தக்கது.
இங்லிஷ் அதிரடியான சதம்:
மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்லிஷ், 47 பந்துகளில் சதம் விளாசினார். டி-20 போட்டிகளில் அவர் விளாசும் முதல் சதம் இதுவாகும். இறுதியில் 50 பந்துகளில் 110 ரன்களை சேர்த்து, பிரஷித் கிருஷ்ணா பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டோய்னிஷ் மற்றும் டிம் டேவிட் கூட்டணியை அதிரடியாக விளையாட விடாமல், இந்திய வீரர்கள் சற்றே கட்டுப்படுத்தினர்.
இந்திய அணிக்கு ரன்கள் இலக்கு:
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை சேர்த்தது. டிம் டேவிட் 19 ரன்களுடனும், ஸ்டோய்னிஷ் 7 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் பிஷ்னோய் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.