இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் களமிறங்கவுள்ளன. 


ஆஸ்திரேலியா - இந்தியா:


இந்நிலையில் இரு அணிகளும் இன்று அதாவது செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி மொஹாலியில் முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். மொத்தம் 10 ஓவர்கள் பந்து வீசிய இவர் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். 


குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான மிட்ஷெல் மார்ஸின் விக்கெட்டை கைப்பற்றி இந்திய அணியின் கணக்கை துவங்கி வைத்த முகமது ஷமி அதன் பின்னர், அதிரடி ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித்தை க்ளீன் போல்ட் ஆக்கினார். அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மார்க்ஸ் ஸ்டைனிஸ் விக்கெட்டினையும் க்ளீன் போல்ட் முறையில் கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னர் மேத்யூவ் ஷார்டின் விக்கெட்டினை கைப்பற்றிய பின்னர் அப்போட்டின் விக்கெட்டினையும் போல்ட் முறையில் கைப்பற்றி அசத்தினார். 




பறந்த ஸ்டம்புகள்:


முகமது ஷமி கைப்பற்றிய 5 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகள் க்ளீன் போல்ட் முறையில் கிடைத்தது. அதேபோல் ஷமியிடம் விக்கெட்டினை பறிகொடுத்த வீரர்களில் 3 பேர் அதிரடி பேட்ஸ்மேன்கள், அந்த மூன்று பேரில் இருவர் க்ளீன் போல்ட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முகமது ஷமி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது கெரியர் பெஸ்ட் பவுலிங்கை பதிவு செய்துள்ளார்.


அதேபோல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கபில் தேவ் 45 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதல் இடத்திலும், 37 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஷமி 2வது இடத்திலும், அஜித் அகர்வால் 36 விக்கெட்டுகள் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் உள்ளார். முகமது ஷமியைப் பொறுத்தவரையில் ஒருநாள் தொடரில் 2வது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 




மிரளும் அணிகள்


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஒரு அணிக்கு எதிராக ஒரு போட்டியில் முறையே 5 மற்றும் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கு நிம்மதியையும் மற்ற அணிக்கு கிலியையும் ஏற்படுத்தியுள்ளது. முகமது சிராஜ் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒருநாள் தொடரில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்த நான்காவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை முகமது சிராஜ் படைத்தார்.


ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக டாப் ஆர்டர் தொடங்கி மிடில் மற்றும் டெயிலெண்டர்ஸ் என மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். இவரின் அட்டகாசமான பந்து வீச்சினால் இலங்கை அணி 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி ஆசிய கோப்பை வராலாற்றில் மிகவும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது மட்டும் இல்லாமல் இந்திய அணி தனது 8வது ஆசிய கோப்பையைக் கைப்பற்றியது.