IND vs AUS 1st ODI: ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி இன்று அதாவது செப்டம்பர் 22ஆம் தேதி மொஹாலியில் உள்ள பிந்ரா மைதானத்தில் தொடங்கியது. 


இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் மிட்ஷெல் மார்ஷ் 4 ரன்கள் சேர்த்த நிலையில் முதல் ஓவரிலேயே ஷமி பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் கைகோர்த்த வார்னர் மற்றும் ஸ்மித் கூட்டணி இந்திய பந்துவீச்சுக்கு நெருக்கடி கொடுக்கும் ஆட்டத்தினை ஆடினர். 


இவர்களின் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் தன்னிடம் இருந்த அனைத்து பந்து வீச்சாளார்களையும் பயன்படுத்திப் பார்த்தார். ஆனால் பலன் எதுவும் உடனே கிடைக்கவில்லை. ஒருவழியாக  அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்த டேவிட் வார்னரின் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார்.  வார்னர் விக்கெட்டை இழக்கும்போது 53 பந்தில் 52 ரன்கள் சேர்த்திருந்தார். அதன் பின்னர் ஸ்மித்தும் தனது விக்கெட்டினை ஷமி பந்து வீச்சில் இழந்து வெளியேற, ஆஸ்திரேலிய அணி 112 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. 




இந்த நேரத்தில் இந்திய அணியின் கரங்கள் சற்று ஓங்கியதைப் போல் இருந்தது. அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க, ஸ்கோர் சீராக உயர்ந்தது. இதற்கிடையில் ஆஸ்திரேலிய அணி 36வது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி சிறுது நேரம் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் தொடங்கப்பட்ட போட்டியில் ஓவர் எதுவும் குறைக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இறுதியில் சிறப்பாக பந்துவீசி விக்கெட் வேட்டையில் ஈடுபட்டனர். 


இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 52 ரன்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இங்லிஷ் 48 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணியின் சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளும் பும்ரா  ஒருவிக்கெட்டும் ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.