2024ஆம் ஆண்டு ஐசிசி நடத்தும் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. இந்த் தொடர் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 4 வரை இலங்கையில் நடைபெற உள்ளது. இது ஐசிசி நடத்தும் 15 வது தொடராகும். இந்த தொடரில் பதினாறு அணிகள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை போட்டியை நடத்துவது இது மூன்றாவது முறையாகும், 2006 க்குப் பிறகு முதல் முறையாகும். ஜனவரி 13 அன்று ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியுடன் இந்த தொடரை இலங்கை தொடர உள்ளது. மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டுக்கான தொடரை வென்ற தற்போதைய சாம்பியனான இந்தியா, 2020 சாம்பியனான பங்களாதேஷுக்கு எதிரான தனது தொடரை ஜனவரி 14ஆம் தேதி தொடங்குகிறது.

கடந்த தொடருக்கும் இந்த தொடருக்கும் உள்ள வித்தியாசம்

வரவிருக்கும் தொடர் முந்தைய தொடரில் இருந்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவும் நான்கு அணிகளைக் கொண்டிருக்கும்.  ஆனால் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் மூன்று அணிகள் குழுநிலை போட்டிகளுக்குப் பின்னர் சூப்பர் சிக்ஸ் நிலைக்கு முன்னேறும். குழுநிலை போட்டிகள் ஜனவரி 13 முதல் 21 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்திய அணியைப் பொறுத்தவரையில் குழு ஏ-வில் இடம் பெற்றுள்ளது. இந்திய அணியுடன் பங்களாதேஷ், அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 

குழுக்கள்:

குழு ஏ குழு பி குழு சி குழு டி
இந்தியா இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான்
பங்களாதேஷ் தென்னாப்பிரிக்கா இலங்கை பாகிஸ்தான்
அயர்லாந்து மேற்கிந்திய தீவுகள் ஜிம்பாப்வே நியூசிலாந்து 
அமெரிக்கா ஸ்காட்லாந்து நமீபியா நேபாளம்


குழு நிலை போட்டிக்குப் பின்னர், ஒவ்வொரு குழுவிலும் நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் தங்கள் தொடரை முடிப்பதற்கு முன்பு மற்றொரு குழுவில் நான்காவது இடத்தைப் பிடித்த அணியுடன் மேலும் ஒரு போட்டியில் விளையாடும் எனவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுநிலையின் முடிவில், 12 அணிகள் அடுத்த கட்டமான சூப்பர் சிக்ஸுக்கு முன்னேறும். இந்த வடிவத்தில், ஆறு அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் உருவாக்கப்படும், A மற்றும் D குழுக்களின் முதல் மூன்று அணிகள் ஒரு குழுவிலும், மேலும் B மற்றும் C குழுவிலிருந்து முதல் மூன்று அணிகள் மற்றொரு குழுவிலும் இடம் பெறும்.

சூப்பர் சிக்ஸ் கட்டத்தின் போது, ​​ஒவ்வொரு அணியும் இரண்டு போட்டிகள் விளையாட வேண்டும். ஆரம்பக் குழுநிலையில் அவர்கள் பெற்ற நிலைகளின் அடிப்படையில் அவர்கள் மற்ற குழுவிலிருந்து அணிகளை எதிர்கொள்வார்கள். உதாரணமாக, குரூப் A (A1) இல் உள்ள முன்னணி அணி, குழு D (D2 மற்றும் D3) இல் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது அணிகளுக்கு எதிராக விளையாடும். A2, D1 மற்றும் D3க்கு எதிராக விளையாடும் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.