உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வேகப்பந்து வீச்சாளர், முகமது ஷமி ஏன் நிச்சயம் இடம்பெற வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


உலகக்கோப்பை தொடர்:


இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்,  அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதே அணி தான் அண்மையில் நடந்து முடிந்த ஆசியக்கோப்பை தொடரிலும் விளையாடியது. அதில் கூடுதல் பேட்ஸ்மேன் தேவை என்ற திட்டத்தில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இடத்திற்கு, ஷமிக்கு பதிலாக ஷர்தூல் தாக்கூர் களமிறக்கப்பட்டார்.


இதே பாணி தான் உலகக்கோப்பை தொடரிலும் பின்பற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உலகக்கோப்பையில் ஷமிக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால், இந்திய அணியின் வெற்றிக்கு ஷமி பிளேயிங் லெவனில் இருக்க வேண்டியது அவசியம் என ரசிகர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தாக்கூருக்கு பதிலாக ஷமியை ஏன் அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான, மூன்று காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


01. சிறப்பான லைன் & லெந்த்:


சரியான் லைன் மற்றும் லெந்த்களில் துல்லியமாக பந்துவீசுவதில் முகமது ஷமி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் அவர் பெற்ற அனுபவம் ஒருநாள் போட்டிகளிலும் அவருக்கு உதவிகரமாக உள்ளது. புதிய மற்றும் பழைய பந்துகளிலும் சிறப்பாக செயல்படுவதன் மூலம், மிடில் ஓவர்களிலும் சீராக விக்கெட் எடுக்கும் திறனை கொண்டுள்ளார். இதனால், முக்கியமான நேரத்தில் பார்ட்னர்ஷிப்பை உடைத்து, இந்திய அணிக்கு பலம் சேர்க்க வல்லவர். அதிலும், இந்திய மண்ணில் போட்டி நடைபெறுவது அவருக்கு இன்னும் சாதகமாக இருக்கும்.


02. அதிகப்படியான அனுபவம்:


நடப்பாண்டு உலகக்கோப்பை தொடர் ஷமிக்கு, மூன்றாவது உலகக்கோப்பை தொடராகும். இதன் மூலம், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில், அதிக அனுபவம் வாய்ந்த வீரராக ஷமி திகழ்கிறார். அவரது அனுபவம் இக்கட்டான நேரங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்ற புரிதலை கொடுத்துள்ளது. ஷமியின் அனுபவம் தனிநபர் செயல்பாட்டிற்கு மட்டுமின்றி, இந்திய அணியின் ஒட்டுமொத்த பவுலிங் யூனிட்டிற்கும் உதவிகரமாக இருக்கும்.


03.  கூடுதல் பேட்ஸ்மேன் எதற்கு?


இந்தியாவின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இடத்தை ஷர்துல் தாக்கூர் கைப்பற்ற ஒரே காரணம், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் வேண்டும் என்பது மட்டுமே. இதன் மூலம் தங்களது பேட்டிங் வலிமையை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆனால், ஷமி அணியில் இருப்பதால் இந்திய பேட்டிங் பலவீனமாகவெல்லாம் இருக்காது. எதிரணி பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் வீழ்த்தக் கூடிய பந்துவீச்சாளர் என்பதோடு, முகமது ஷமியின் பேட்டிங்கும் அண்மை காலங்களில் சிறப்பாக தான் உள்ளது. குறைந்த நேரத்திலேயே மிகப்பெரிய பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசும் திறனும் கொண்டுள்ளார்.


உலகக்கோப்பையில் ஷமி:


இந்த மூன்று முக்கிய காரணங்கள் மட்டுமின்றி, உலகக்கோப்பை தொடர்களில் இதுவரையிலான அவரது செயல்பாடும், பிளேயிங் லெவனில் ஷமியின் அவசியத்தை உணர்த்துகிறது. 2015 மற்றும் 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்களில் 11 இன்னிங்ஸ்களில் விளையாடி, 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகக்கோப்பையில் இந்தியாவின் டாப் 5 விக்கெட் டேக்கர்களில் 3வது இடத்தில் உள்ளார்.  அதோடு 15.70 என்ற சிறந்த சராசரியையும் கொண்டுள்ளார். எகானமி 5.06 ஆக இருக்க, ஒரு போட்டியில் 69 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஷமியின் சிறந்த பந்துவீச்சாக உள்ளது.