உலகக்கோப்பை இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய, பந்துவீச்சாளர்களின் பட்டியலில் ஜாகீர் கான் முதலிடத்தில் நீடிக்கிறார்.


உலகக்கோப்பை தொடர்:


ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா,  அக்டோபர் 5-ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கி இந்தியாவின் 10 நகரங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உட்பட ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்ல தங்களை தயார்படுத்தி வருகின்றன. உள்ளூரில் நடைபெறுவதால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பையை கைப்பற்ற இந்தியா சற்று கூடுதலாகவே தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய, டாப் 5 வீரர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


01. ஜாகீர் கான் 


2000வது ஆண்டுகளில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக திகழ்ந்த, ஜாகீர் கான் தான் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், தனது இன்ஸ்விங்குகளால் எதிரணியை திணறடித்தது எந்தவொரு இந்திய ரசிகனாலும் மறக்க முடியாது. இவரை போன்ற ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளரை பெற முடியாமல், இந்திய அணி தற்போது வரை திணறி வருவது குறிப்பிடத்தக்கது. 2003, 2007 மற்றும் 2011 என மூன்று உலகக்கோப்பை தொடர்களில் விளையாடிய ஜாகீர் கான், 23 இன்னிங்ஸ்களில் 44 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.  42 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது உலகக்கோப்பை தொடரில் ஜாகீர் கானின் சிறந்த பந்து வீச்சாக உள்ளது.


02. ஜவகல் ஸ்ரீநாத்:


ஜாகீர் கானுக்கு முன்னதாக இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தலைமை தாங்கியவர் ஜவகல் ஸ்ரீநாத். நாட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இருவிதமான போட்டிகளிலும் விக்கெட் வேட்டை நடத்தினார். 1992 தொடங்கி 2003ம் ஆண்டு வரை 4 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடிய அவர், 34 இன்னிங்ஸ்களில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 30 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தது, உலகக்கோப்பை தொடரில் ஸ்ரீநாத்தின் சிறந்த பந்துவீச்சாக உள்ளது.


03. முகமது ஷமி:


உலகக்கோப்பை தொடரில் வேறு எந்தவொரு இந்திய வீரரும் கொண்டிராத அளவிலான, சிறந்த சராசரியை முகமது ஷமி கொண்டுள்ளார். 2015 மற்றும் 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியில் இடம்பெற்ற அவர், வெறும் 11 இன்னிங்ஸ்களில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  ஒரு போட்டியில் 69 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தது சிறந்த பந்துவிச்சாக உள்ளது. புதிய மற்றும் பழைய பந்து என இரண்டிலும் சிறப்பாகவும், துல்லியமாகவும் பந்துவீசுவது அவரது பலமாக உள்ளது. நடப்பாண்டிலும் அவர் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


04. அனில் கும்ப்ளே:


டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் மிகப்பெரும் மேட்ச் வின்னராக கொண்டாடப்படும் அனில் கும்ப்ளே, ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில், இடம்பெற்றுள்ள ஒரே சுழற்பந்து வீச்சாளரும் கும்ப்ளே தான். 1996 தொடங்கி 2007ம் ஆண்டு வரையில் 4 உலகக்கோப்பை தொடர்களில், 18 இன்னிங்ஸ்களில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிறந்த பந்துவீச்சு - 4/32


05. கபில் தேவ்:


இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்ற கபில் தேவ் இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் ஆகச்சிறந்த ஆல்-ரவுண்டரான இஅவர் 1979 தொடங்கி 1992 வரை 4 உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்று, 25 இன்னிங்ஸ்களில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிறந்த பந்துவீச்சு - 5/43