IND Vs AFG,T20 Worldcup:  ஐசிசி உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில், இந்தியா மற்றும் ஆஃப்கானிதான் அணிகள் இன்று மோத உள்ள போட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.


ஐசிசி டி-20 உலகக் கோப்பை:


ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடங்கி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்ற நிலையில், அவை குரூப் - ஏ, குரூப் - பி, குரூப் - சி மற்றும் குரூப் - டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.  அவை குரூப்-1 மற்றும் குரூப் 2 என பிரிக்கப்பட்டு தற்போது போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


இந்தியா - ஆஃப்கானிஸ்தான் மோதல்:


இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, பார்படோஸில் உள்ள கென்சிங்டோன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். லீக் சுற்றில் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆஃப்கானிஸ்தான் அணி 3 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியை பதிவு செய்தது. சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் 3 போட்டிகளில் விளையாடும். அதன் முடிவில் இரண்டு பிரிவுகளிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 


பலம், பலவீனங்கள்:


இந்திய அணி விளையாடிய லீக் போட்டிகள் அனைத்துமே அமெரிக்காவில் தான் நடைபெற்றன. அந்த மைதானங்களில் இந்திய பேட்ஸ்மேன்களால் பெரிதாக சோபிக்க முடியவில்லை என்பதே உண்மை. அதேநேரம், பந்துவீச்சாளர்கள் கூட்டாக சேர்ந்து அபார திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். அனால், சூப்பர் 8 சுற்று போட்டிகள் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. இங்கு இந்திய அணி பேட்ஸ்மேன்கள் திறம்பட செயல்பட வேண்டியது கட்டாயம். குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் ரன் குவித்தால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியமாகும். கோலி களமிறங்கிய 3 போட்ட்களிலும் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தால், அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


ஆஃப்கானிஸ்தான் அணியை பொறுத்தமட்டில், நடப்பு உலகக் கோப்பையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குர்பாஸ் உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்  ரன் குவிக்க, ஃபருகி போன்றோர் விக்கெட் வேட்டை நடத்தி வருகின்றனர். கேப்டன் ரஷித் கான் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களித்து அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். எனவே இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, ஒட்டுமொத்த கூட்டு முயற்சியை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.


நேருக்கு நேர்:


சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை எதிர்கொண்ட 8 முறையும், இந்திய அணி ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


உத்தேச அணி விவரங்கள்:


இந்தியா : ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த் , சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்


ஆப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், ரஷீத் கான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி