இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
இந்நிலையில் இன்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. சின்னச்சாமி மைதானம் சிக்ஸர்கள் விளாசுவதற்கு ஏதுவான மைதானம் என்பதால் இந்திய அணி தரப்பில் சிக்ஸர்கள் விளாசப்படும் என எதிர்பார்த்து ரசிகர்கள் பெங்களூரு மைதானத்தில் சூழ்ந்தனர். முதல் இரண்டு போட்டியில் ப்ளேயிங் லெவனில் இல்லாத சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக பேட்டிங் செய்து இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது. ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டினை 11வது ஓவரின் கடைசி பந்தில் இழந்தது. அப்போது ஆஃப்கானிஸ்தான் அணி 93 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் 107 ரன்னில் ஆஃப்கான் அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் ஆஃப்கான் அணியின் பேட்டிங்கைப் பார்த்தபோது இந்த போட்டியில் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் ஆஃப்கான் அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19வது ஓவரில் விராட் கோலி நீண்ட தூரம் ஓடிவந்து சிறப்பாக கேட்ச் பிடித்ததால் போட்டியில் நமக்கான வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் இறுதி ஓவரில் ஆஃப்கான் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. 20வது ஓவரை இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் வீசினார். முதல் பந்து வைய்டாகப் போனது. இதனால் இலக்கு 18ஆக குறைந்தது. மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தை குல்பைதின் பவுண்டரிக்கு விளாசினார். அடுத்த பந்தை மிஸ் செய்ய, மூன்றாவது பந்தை மீண்டும் வைய்டாக வீசினார் முகேஷ். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுக்க, 4வது பந்தை சிக்ஸருக்கு விளாசினார் குல்பைதின். இதனால் இலக்கு 2 பந்துகளுக்கு 5 ரன்களாக குறைந்தது. 5வது பந்தில் 2 ரன்களும் 6வது பந்தில் இரண்டு ரன்களும் சேர்த்ததால் போட்டி டிரா ஆனது.
இரண்டு சூப்பர் ஓவர்
இதனால் போட்டியின் வெற்றியாளரை தேர்வு செய்ய சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் சூப்பர் ஓவரை எதிர்கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அதில் ஒரு விக்கெட்டினை இழந்தது மட்டும் இல்லாமல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி மொத்தம் 16 ரன்கள் சேர்த்தது. 17 ரன்களை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இதில் இந்திய அணி 16 ரன்கள் எடுக்க போட்டி மீண்டும் டிரா ஆனாது. இதனால் இரண்டாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் இந்திய அணி 5 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 12 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கான் அணி 3 பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதாவது இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.