இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் அவர் கேப்டனாக இருந்தாலும் அவர் கடந்த 14 மாதங்களாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் களமிறங்கவில்லை. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ரோகித், அவரது தலைமையில் இந்திய அணிக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுக்க தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பை இழந்தது. இதனால் இந்திய அணிக்கு தனது தலைமையில் ஐசிசி கோப்பைகளை வெல்ல வேண்டும் என்ற ரோகித் சர்மாவின் கனவுக்கு அடுத்து உள்ள வாய்ப்புகளில் ஒன்று ஐசிசி டி20 உலகக் கோப்பை.
இதனால் ரோகித் சர்மா ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக களமிறங்கினார். முதல் இரண்டு போட்டிகளில் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். இதனால் விமர்சகர்கள், ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டிற்கு “நாட் ஃபிட்” என கூறிவந்தனர். அதாவது டி20 போட்டியில் விளையாடுவதற்கான உடற்தகுதி ரோகித் சர்மாவுக்கு இல்லை என கூறினர். இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். குறிப்பாக விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் தங்களது விக்கெட்டுகளை கோல்டன் டக்காக இழந்து வெளியேறினர்.
அதன் பின்னர் இளம் வீரரான ரிங்கு சிங் ரோகித்துடன் கைகோர்த்தார். வழக்கமாக அதிரடிகாட்டும் ரிங்கு இம்முறை ரோகித்தின் அட்வைஸ்களைக் கேட்டு விளையாடி களத்தில் இறுதிவரை இருந்தார். ரிங்கு சிங் 39 பந்துகளில் 2 பவுண்டரி 6 சிக்ஸர்கள் விளாசி 69 ரன்கள் குவித்திருந்தார். போட்டியின் முதல் பந்தில் இருந்து இறுதிப் பந்துவரை களத்தில் இருந்த ரோகித் சர்மா 69 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 11 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் விளாசி 121 ரன்கள் குவித்தார். அதாவது இதில் ரோகித் சர்மா சிக்ஸரில் எடுத்த ரன்கள் மட்டும் 48 பவுண்டரியில் குவித்த ரன்கள் மட்டும் 44. ரோகித் சர்மா கிரீஸ்க்குள் நின்றுகொண்டு மட்டும் 92 ரன்கள் குவித்துள்ளார்.
ரோகித் சர்மாவின் 5வது சர்வதேச டி20 இதுவாகும். டி20 போட்டிகளில் அதிக சதம் விளாசியவர் இவர் மட்டும்தான். இவருக்கு அடுத்து சூர்யகுமார் யாதவ் 4 சதங்களுடன் உள்ளார். ரோகித் சர்மாவை “அன் ஃபிட்” எனக் கூறியவர்களுக்கு தனது அதிரடி ஆட்டத்தினால் பதில் அளித்துள்ளார். குறிப்பாக ரோகித் சர்மா போட்டியின் 19வது ஓவரில் ஆஃப் சைடு ஸ்டெம்ப் திசையில் வைய்டு லைனில் சென்ற பந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் லெக் சைடில் மடக்கி பவுண்டரி விளாசுவதற்கு உடற்தகுதி கட்டாயம் தேவை. இந்த ஷாட்டைப் பார்க்கும்போது, இணையத்தில் ரோகித் சர்மா குறித்து வலம் வரும் முக்கியமான வீடியோக்களில் ஒன்று நினைவுக்கு வருகின்றது. இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம், விராட் கோலி பேசுகையில், டெத் ஓவர்களில் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன் யார் எனக் கேட்டதாகவும், அதற்கு அஸ்வின் தோனியின் பெயரைச் சொல்லி இருக்கின்றார். இதனை மறுத்த கோலி, ரோகித் சர்மாவின் பெயரைச் சொல்லியுள்ளார். இதனை அஸ்வினே பேசியுள்ளார். இதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரோகித் சர்மா.
இந்த போட்டியில் ரோகித் சர்மா படைத்த சாதனைகள்
- சர்வதேச டி20 போட்டியில் 5 சதங்கள் விளாசிய முதல் வீரர்
- இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டியில் ஒரு விக்கெட்டுக்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் - ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் 190* ரன்கள்
- இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டியில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரில் 4வது இடத்தினை 121 ரன்களில் பெற்றுள்ளார்.