இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
இந்நிலையில் இன்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. சின்னச்சாமி மைதானம் சிக்ஸர்கள் விளாசுவதற்கு ஏதுவான மைதானம் என்பதால் இந்திய அணி தரப்பில் சிக்ஸர்கள் விளாசப்படும் என எதிர்பார்த்து ரசிகர்கள் பெங்களூரு மைதானத்தில் சூழ்ந்தனர். முதல் இரண்டு போட்டியில் ப்ளேயிங் லெவனில் இல்லாத சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். முதல் இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆன ரோகித் சர்மா இந்த போட்டியில் ஏமாற்றம் அளிக்கமாட்டார் என ரசிகர்கள் நம்பினர். ரோகித் சிறப்பாக விளையாடினாலும் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். ஜெய்ஸ்வால், விராட் கோலி, டூபே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் முதல் 4 ஓவர்களில் தங்களது விக்கெட்டினை இழந்தனர். இதில் விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆனார்கள்.
இது இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது. பெங்களூரு மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அமைதியாகிவிட்டனர். கடைசி 5 ஓவர்காள் விளையாடும் ரிங்கு சிங் போட்டியின் 5வது ஓவரில் களமிறங்கவேண்டிய நிலைக்கு ஆளானார். அவருக்கு கேப்டன் ரோகித் சர்மா களத்தில் சில அறிவுரைகளை வழங்க ரிங்கு நிதானமாக ஆட ஆரம்பித்தார்.
இருவரும் இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். பொறுப்புடன் ஆடிய ரோகித் சர்மா 41 பந்துகளில் தனது அரைசதத்தினை விளாசினார். இருவரும் இணைந்து 66 பந்துகளில் 100 ரன்கள் குவித்தனர். 15வது ஓவருக்குப் பின்னர் இருவரும் அடித்து ஆடவேண்டும் என்ற முயற்சியில் விளையாடியதால், ஆஃப்கான் அணி பந்து வீச்சாளர்களுக்கு பதட்டத்தை உண்டாக்கியது. 16வது ஓவரில் மட்டும் இந்திய அணி எக்ஸ்ட்ராஸ்களுடன் சேர்த்து 22 ரன்கள் சேர்த்தது.
இறுதியில் ரோகித் சர்மா தனது வேகத்தை தாறுமாறாக அதிகரிக்க அவர் தனது சதத்தினை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் ரிங்கு தனது அரைசத்தினை எட்ட மைதானமே ஆர்ப்பரித்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது.