ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 


ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக கேப்டன் கே.எல் ராகுல் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 -0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது. இன்று நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி வெயிட் வாஷ் செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது. 






கடந்த இரண்டு போட்டிகளில் முதலில் பந்துவீசுவதைத் தேர்ந்தெடுத்த பிறகு, தொடரில் முதல்முறையாக டாஸ் வென்ற ராகுல் முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். முதல் ஒருநாள் போட்டியில் 3-27 என எடுத்து, இரண்டாவது போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். அதேபோல், வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கானும் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார். 


இதுகுறித்து பேசிய கேப்டன் ராகுல், “இந்த இரண்டு வீரர்களுக்கு பதிலாக முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனக்கு என்னை நிரூபிக்கும் நேரம் குறைவாகவுள்ளது. அதனால் சில ரன்களை எடுக்க, மிடில் ஆர்டரில் நேரத்தை செலவிட ஆவலாக உள்ளேன். ஆசிய கோப்பைக்கு முன் கொஞ்சம் நம்பிக்கையை பெறுவது நல்லது என்று தோன்றுகிறது. 


சிராஜ் கடந்த இரண்டு சீசன்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அந்த ஃபார்மை ODI ஆட்டத்திலும் கொண்டு வந்தார்” என தெரிவித்தார். 


ஜிம்பாப்வே கேப்டன் ரெஜிஸ் சகப்வா கூறுகையில், ”முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய ரிச்சர்ட் ங்கராவா, தனகா சிவாங்கா அணிக்காக திரும்புகிறார். பந்தின் மூலம் நாம் இன்று ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிக்க வேண்டும். பின்னர் பேட்டிங் மூலம் எங்களை நிரூபிப்போம். இன்று முதலில் பந்துவீச்சு செய்வதில் மகிழ்ச்சி. குறிப்பாக நாங்கள் டாஸ் வென்று இருந்தாலும் முதலில் பந்து வீச விரும்பினோம்” என்று தெரிவித்தார். 


இந்தியா:


ஷுப்மான் கில், ஷிகர் தவான், இஷான் கிஷன், கே.எல். ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், தீபக் சாஹர் மற்றும் அவேஷ் கான்.


ஜிம்பாப்வே:


இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, டோனி முனியோங்கா, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நயாச்சி மற்றும் ரிச்சர்ட் நகரவா.