முழங்கால் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ”இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் சொந்த மண்ணிலும் விளையாடமாட்டார். சமீபத்திய ஸ்கேன்கள் மற்றும் அறிக்கைகளைத் தொடர்ந்து பிசிபி மருத்துவ ஆலோசனைக் குழு ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு 4-6 வாரங்கள் ஓய்வளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஷாஹீன் ஆசிய கோப்பை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான சொந்தத் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து ஆசிய கோப்பைக்கான ஷஹீனுக்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகப்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதியது. அன்றைய போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான கேஎல் ராகுல், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் விக்கெட்களை ஷாஹீன் அப்ரிடி அள்ளினார். இதன் மூலம் உலகப்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் தோல்வியே கண்டிராத இந்திய அணி முதல் முறையாக தோல்வி அடைந்தது. இந்திய அணிக்கு அது மிகப்பெரிய விமர்சனத்தை கொடுத்தது.
இதன் காரணமாக, ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஷாஹீன் அப்ரிடி விலகியதையடுத்து இந்திய ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கொண்டாடினர்.
ஷாஹீன் அப்ரிடி விலகியதை தொடர்ந்து இந்திய ரசிகர்கள் மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை கிண்டல் செய்யும் விதமாக முன்னாள் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாகர் யூனிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், ”ஷஹீனின் காயம் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நிம்மதி. ஆசிய கோப்பை தொடரில் அவரைப் பார்க்க முடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், வாகர் யூனிஸின் பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் ட்விட்டரில் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “பும்ராவும் ஹர்ஷலும் இந்த ஆசிய கோப்பையில் விளையாடாதது மற்ற அணிகளுக்கு நிம்மதி” என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.