மகளிர் பிரீமியர் லீக் ஏலம்:


முதன்முறையாக நடைபெற உள்ள மகளிர் பிரீமியர் லீக்கில் பங்கேற்க உள்ள, வீராங்கனைகளுக்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது. மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் பிற்பகல் 2.30 மணியளவில் இந்த ஏலம் தொடங்க உள்ளது. இதில் தங்களுக்கான 90 வீராங்கனைகளை தேர்வு செய்ய, 5 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.


ஏலத்தை நடத்தப்போது யார்?


மகளிர் கிரிக்கெட்டின் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஏலத்தை, இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் தான் நடத்த உள்ளார்.  மும்பையைச் சேர்ந்த கலை பொருட்கள் சேகரிப்பாளரும்,  ஆலோசகருமான மல்லிகா சாகர் தான் இந்த ஏலத்தை நடத்த இருக்கிறார். ஏலம் விடுவதில் பெரிய அனுபவம் கொண்ட இவர், கடந்த 2021ம் ஆண்டு புரோ கபடி லீக்கிற்கான ஏலத்தையும்  நடத்தியுள்ளார். முன்னதாக ஐபிஎல் தொடருக்கான ஏலத்தை நடத்த வெளிநாட்டவர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், முதல் முறையாக நடைபெற உள்ள மகளிர் பிரீமியர் லீக்கிற்கான ஏலத்தை இந்திய பெண் ஒருவரே நடத்த உள்ளார்.


இறுதி ஏலப்பட்டியல்:


இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம்  1,525 பேர் முன்பதிவு செய்த நிலையில், இறுதியாக 409 பேரின் பெயர்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டு உள்ளது.  அதில், 246 பேர் இந்தியர்கள், 163 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள் ஆவர். இந்த வீராங்கனைகள் மார்க்யூ வீரர்கள், பேட்டர்கள், ஆல்ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் வீரர்கள் என பல்வேறு பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில், ஒரு அணிக்கு 18 பேர் என மொத்தமே 90 பேர் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.  அவர்களில் 60 பேர் இந்திய வீராங்கனைகள். மீதமுள்ள 30 இடங்கள் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.


ஏலத்தொகை:


தங்களுக்கான வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்க ஒரு அணிக்கு மொத்தமாக 12 கோடி ரூபாய் வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை விலையாக ரூ.50 லட்சம், ரூ.40 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதுவரை இந்திய அணிக்காக விளையாடாத வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம்  அடிப்படைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதிகப்படியான ஏலத்தொகை:


அதிபட்ச அடிப்படை ஏலத்தொகையான ரூ.50 லட்சம் பிரிவில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட 10 இந்தியர்கள் உட்பட 24 வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று, அடிப்படை ஏலத்தொகையான 40 லட்ச ரூபாய் பட்டியலில் 30 வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


அதிக விலைக்கு போக வாய்ப்பு:


இந்த ஏலத்தில் ஒரு சில முக்கியமான வீராங்கனைகளை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ், மெக் லானிங், ஷஃபாலி வர்மா, சுசி பேட்ஸ், ஸ்மிருதி மந்தனா, ஹர்மன் பிரீத் கவுர், தீப்தி ஷர்மா மற்றும் எல்லீஸ் அலெக்சாண்ட்ரா பெர்ரி உள்ளிட்டோர் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏலத்தில் பங்கேற்க உள்ள அணிகள்:


1. குஜராத் ஜெயண்ட்ஸ்


2. உபி வாரியர்ஸ்


3. டெல்லி


4. பெங்களூரு


5. மும்பை


மகளிர் ஐபிஎல்:


முதல்முறையாக நடைபெற உள்ள மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன.  வரும் மார்ச் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. அறிமுக தொடரில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும் எனவும், பர்போர்ன் மற்றும் டி.ஓய். பட்டேல் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது