டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக மோதியிருந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றிருந்தது. உலகக்கோப்பை போட்டிகளில் முதல் முறையாக இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியிருக்கிறது. இதனை தொடர்ந்து இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீது சிலர் வெறுக்கத்தக்க வகையில் மதரீதியிலான பிரிவினைரீதியிலான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷமிக்கு ஆதரவாக ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியலர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பொறுத்தவரைக்கும் பாகிஸ்தான் அணி எல்லாவிதத்திலும் இந்தியாவை விட சிறப்பாக ஆடியிருந்தது. முகமது ஷமி மட்டுமில்லை. இந்திய வீரர்கள் அத்தனை பேருமே வழக்கத்தை விட சுமாராகத்தான் ஆடியிருந்தனர். அப்படியிருக்கையில், முகமது ஷமியை மட்டும் குறிவைத்து 'பாகிஸ்தானுக்கு போ' 'பாகிஸ்தானிடம் விலை போய்விட்டாய்' போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது முழுக்க முழுக்க அடிப்படைவாதத்தின் வெளிப்பாடே.
பிற்போக்கு வாதமும் அடிப்படைவாதமும் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டியவை. கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமே. இதற்குள் அதீத ரசிக வெறியையும் வெறுப்பரசியலையும் போலி தேசியவாதத்தையும் புகுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு உதாரணமாக ஒரு பழைய சம்பவத்தை குறிப்பிடலாம்.
ஜனவரி 1999. வழக்கம்போல இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முட்டல் மோதல்கள், சமரச பேச்சுவார்த்தைகள் என சர்ச்சையான காலகட்டமாகவே இருந்தது. இந்த சமயத்தில் வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு கிரிக்கெட் ஆட வந்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்திருந்ததால் எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறியிருந்தது. முதல் டெஸ்ட் போட்டியே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி போட்டியில் களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கிறது. ட்ரெஸ்ஸிங் ரூம் மீட்டிங்கில் வீரர்களுடன் கேப்டன் வாசிம் அக்ரம் இந்தியாவிற்கு எதிராக வகுத்திருக்கும் திட்டங்கள் குறித்து உரையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு விஷயத்தை குறிப்பிட்டு சொல்கிறார். அதாவது, 'நாம் இந்தியாவில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் கிரிக்கெட் ஆடப்போகிறோம். நம்முடைய செயல்பாடுகளை அவர்களின் ரியாக்சன் மூலமே தெரிந்துக் கொள்ளலாம். ரசிகர்கள் உற்சாகமேயின்றி அமைதியாக சலனமே இல்லாமல் இருந்தார்கள் எனில் நாம் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். ரசிகர்களை அமைதியாக வைத்திருப்பதுதான் நமது வேலை. அவர்கள் அமைதியாகும்படிக்கு நாம் பெர்ஃபார்ம் செய்ய வேண்டும்' என கூறினார்.
அதாவது, 'இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானுக்கு ஒரு போதும் ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள். அதனால், பாகிஸ்தான் சிறப்பாக ஆடினால் துளி கூட ஆராவாரம் செய்யமாட்டார்கள்' என்றே வாசிம் அக்ரம் நினைத்திருக்கிறார்.
வாசிம் அக்ரம் அப்படி நினைப்பதற்கு இருநாடுகளின் மோதல் மட்டும் காரணமில்லை. 1996 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்தியாவும் இலங்கை அணியும் மோதியிருந்தன. இலங்கை அணி முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை எடுக்க, சேஸிங்கில் இந்தியா தடுமாறியிருக்கும். அனைத்து வீரர்களும் சொதப்ப சச்சின் மட்டும் நின்று அரைசதம் அடித்திருப்பார். ஒரு கட்டத்தில் சச்சினும் அவுட் ஆக இந்தியாவின் தோல்வி உறுதியானது. ஏமாற்றத்தில் வெறியான ரசிகர்கள் பாட்டில்களை வீசி எறிந்து, மைதானத்தில் தீயை கொளுத்தி ரகளை செய்திருந்தனர். பாதுகாப்பில்லாததால் போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டு இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும். இந்திய கிரிக்கெட் வரலாற்றின் இருண்ட நாளாக அந்த மார்ச் 13, 1996 நினைவுகூரப்படுகிறது.
அந்த சம்பவம் நடந்த சில ஆண்டுகளிலேயே சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது. இலங்கைக்கு எதிராகவே வெறியான ரசிகர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக என்றால் சொல்லவா வேண்டும்? அதனால்தான் வாசிம் அக்ரம் போட்டிக்கு முன்பாக சக வீரர்களிடம் இந்திய ரசிகர்கள் குறித்து அப்படி ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.
ஆனால், வாசிம் அக்ரமின் எண்ணத்திற்கு மாறான சம்பவங்கள் அரங்கேறியது. பாகிஸ்தான் வீரர்கள் ஒவ்வொரு முறை சிறப்பாக செயபடும்போதும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிப்பதை போலவே பாகிஸ்தானுக்கும் ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். சக்லைன் முஷ்டக்கின் 5 விக்கெட் ஹால், அஃப்ரிடியின் சதம் போன்ற ஹைலைட்டான மொமண்டுகளுக்கு பெரும் மகிழ்ச்சியோடு கைத்தட்டி ஆராவாரம் செய்கின்றனர். அந்த போட்டியில் இந்திய அணி தோற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் சச்சின் இந்திய அணியை காப்பாற்ற போராடினார். ஆனாலும் சச்சினின் சதம் வீணானது. இந்தியா நெருங்கி வந்து வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கும். பாகிஸ்தான் அணி போராடி அந்த போட்டியை வென்றது. இப்போது நடந்ததுதான் இன்னும் ஆச்சர்யம். சேப்பாக்கம் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் அத்தனை பேரும் எழுந்து நின்று வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்காக கைத்தட்டி பாராட்டுகளை தெரிவித்தனர்.
'பாகிஸ்தானியர்கள்' என்பதால் நமக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள் என தப்புக்கணக்கு போட்டிருந்த வாசிம் அக்ரம் நெகிழ்ந்து போனார். ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியுமே சென்னை ரசிகர்களில் ஆர்ப்பரிப்பில் உறைந்து போனது.
சென்னை சேப்பாக்கத்தில் குழுமியிருந்த ரசிகர்களுக்கு எந்தவித வெறுப்புணர்ச்சியும் இருந்திருக்கவில்லை. அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதாலயே அவர்களை புறக்கணிக்க வேண்டும் என நினைக்கவில்லை. நல்ல கிரிக்கெட் ஆடிய அணி வென்றிருக்கிறது. அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவ்வளவுதான்.
இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் மிக முக்கிய சம்பவமாக இன்று வரை நிலைத்திருக்கிறது. வாசிம் அக்ரமிடம் இப்போது மைக்கை நீட்டி 'இந்தியா-பாகிஸ்தான் மோதலில் உங்களுக்கு பிடித்த போட்டி, உங்களுக்கு பிடித்த சம்பவம் எது?' என கேட்டால், 22 வருடங்களுக்கு முன் சேப்பாக்கத்தில் நடந்த அந்த போட்டியையும் அந்த சம்பவத்தையுமே குறிப்பிடுவார்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே போர் மாதிரியும் இரண்டு நாட்டு மக்களும் முட்டி மோதிக் கொண்டு நிற்பதை போலவும் வெறுப்பு விளம்பரங்கள் எங்கும் நிறைந்து கிடக்கும். அரசியல்வாதிகள், முன்னாள் வீரர்கள் என்ற பெயரில் பலரும் கண்ணாடி மாளிகைக்குள் அமர்ந்து கொண்டு வெறுப்பை விதைக்க சாமானிய ரசிகர்கள் அதற்கு இரையாகி முகமது ஷமி போன்ற வீரர்களை வரம்பு மீது விமர்சனம் என்ற பெயரில் சேற்றை வாரி இரைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களெல்லாம் ஒரு முறை அந்த 1999 சென்னை டெஸ்ட் போட்டியின் ஹைலைட்ஸை பார்த்துவிட்டு வாருங்கள். கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக மட்டுமே அணுக வேண்டும். இங்கே வெறுப்புணர்வுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்கிற ஒரு மேம்பட்ட எண்ணத்தை சென்னை ரசிகர்கள் கற்றுக் கொடுப்பார்கள்.