துபாய் மைதானத்தில் இன்று தென்னாப்பிரிக்கா அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதன்படி, பேட்டிங்கை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எவின் லீவீஸ் அதிரடியான தொடக்கத்தை தந்தார். ஆனால், மறுமுனையில் இருந்த சிம்மன்ஸ் அவரது அதிரடிக்கு வேட்டு வைக்கும் வகையில் பந்துகளை விரயம் செய்து கொண்டிருந்தார்.




அணியின் ஸ்கோர் 10.3 ஓவர்களில் 73 ரன்களை எட்டியபோது அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த லிவீஸ் 35 பந்தில் 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் பூரனும் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், மேற்கிந்திய தீவு ரசிகர்களே நொந்து போகும் அளவிற்கு ஆடிய சிம்மன்ஸ் 35 பந்தில் 16 ரன்களை எடுத்த நிலையில் ரபாடா பந்தில் போல்டானார்.




அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் பொல்லார்டும், கிறிஸ் கெயிலும் அதிரடியாக ஆட முயற்சித்தனர். ஆனால், அந்த அதிரடி நீண்டநேரம் நீடிக்கவில்லை. 12 பந்தில் 1 சிக்ஸருடன் 12 ரன்கள் எடுத்திருந்த கிறிஸ் கெயில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஸலும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் ஹெட்மயர் 1 ரன்னில் ரன் அவுட்டானார். நம்பிக்கை அளித்த கேப்டன் பொல்லார்டும் 20 பந்தில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்தது.  தென்னாப்பிரிக்க தரப்பில் ப்ரெட்ரியஸ் 3 விக்கெட்டுகளையும், மகராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி தொடக்கம் அதிர்ச்சியாகதான் தொடங்கியது. கேப்டன் தெம்பா பவுமா 2 ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த ஹென்ரிக்ஸ் மற்றும் வான்டெர்டுசென் ஜோடி அற்புதமாக ஆடியது.





இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 59 ரன்களை சேர்த்தனர். ரீசா ஹென்ட்ரிக்ஸ் அணி 30 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய எய்டன் மார்க்ரம் அதிரடியாகவே ஆடினார். அவரது அதிரடியால் தடுமாறிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்காவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. கடைசியில் தென்னாப்பிரிக்க அணி 18.2 ஓவர்களில் 144 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. வான்டெர்டுசென் 51 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 43 ரன்களுடனும், மார்க்ரம் 26 பந்தில் 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.


மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண