இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 






15 ஆசியக் கோப்பைக்கான தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதவுள்ளன. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தான் - இந்திய அணிகளின் அனல் பறக்கும் மோதல் 28ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கவுள்ள இந்த தொடரானது ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. 


இதுவரை ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 14 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி அதில், இந்தியா 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோகித் ஷர்மா, இந்திய வீரர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்துள்ள இந்திய வீரர் எனும் பெருமையோடு இருக்கிறார். 


இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, ஆசிய கோப்பை குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “இந்திய அணி மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இளம் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு என்பது மிகவும் கவனம் பெற்றுள்ளது. இந்திய அணியில் வீரர்களுக்கு என தனி சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அவர்கள், அணிக்கு என்ன வழங்கவேண்டும், அணி என்ன எதிர்பார்க்கிறது என்பது குறித்து தெரிந்து செயலாற்ற வேண்டும். களத்தில் நமது கரங்களில் பந்து இருக்கிறது என்றலே நாம் ஒரு நெருக்கடியில் இருக்கிறோம் எனபதை உணர்ந்து விளையாட வேண்டும். அதேபோல், மிடில் ஆர்டரில் களம் இறங்கக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு உள்ள நெருக்கடி என்பதும் மிக முக்கியமான தருணமாக இருக்கும். வெற்றிக்கு ஒரு வீரராக மட்டுமில்லாமல் ஒரு அணியாகவும் இணைந்து விளையாடவேண்டிய தேவை எப்போதும் இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.   ரோகித் கேப்டனாக பெறுப்பேற்ற பிறகு, இந்திய அணி நேரடியாக எதிர்கொள்ளும் போட்டித் தொடர் இது என்பதால் இவர் மீதான் உலக கிரிக்கெட் ரசிகர்கள் பார்வையும் மிகவும் கூர்மையாகியுள்ளது. அதிலும், இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் கோப்பையை வென்ற இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவும் அணியில் இருப்பதால் ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டி20 உலககோப்பைக்கு முன்னர் அடுத்தடுத்த போட்டிகளில் ஒவ்வொரு யுக்தியைக் கையாண்டு போட்டிகளை எதிர்கொள்ள வேண்டிய அனுபவத்தினை பெறுவதால், இந்த தொடரில் பெறும் அனுபவம் அக்டோபரில் தொடங்கும் டி20 உலககோப்பைக்கு உதவும் என எதிர் பார்க்கப்படுகிறது.