Just In





IND vs ZIM 2nd ODI :தொடக்கத்தில் சரிந்த விக்கெட்கள்.. விட்டு கொடுக்காமல் இந்திய அணியை மீட்டு கொடுத்த சஞ்சு, ஹூடா.!
ஜிம்பாவே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதையடுத்து, இன்று ஜிம்பாவே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் முதல் போட்டியில் விளையாடிய பந்துவீச்சாளர் தீபக் சாஹர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இடம்பிடித்துள்ளார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல், நியாட்சி வீசிய 2வது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் 1 ரன்னில் வெளியேறினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 21 பந்துகளில் 33 ரன்கள் அடித்து நடையைகட்ட, கடந்த போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய சுப்மன் கில்லும் 33 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து களம் கண்ட இஷான் கிஷன் 6 ரன்களுடன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
இதன் மூலம் இந்திய அணி 15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்து சற்று தடுமாறியது. தீபக் ஹுடாவுடன் இணைந்த சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி ஜிம்பாவே அணியின் விக்கெட் வேட்டையை தடுக்க தொடங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹுடா 25 ரன்களில் வெளியேற, பொறுமையுடன் விளையாடிய சஞ்சு சாம்சன் 43 ரன்கள் அடித்து இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.
இந்திய அணியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சஞ்சு சாம்சன் 43 ரன்களும், அக்சார் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஜிம்பாவே அணி சார்பில் லூக் ஜாங்வே 2 விக்கெட்களும், தனகா சிவாங்கா, நியாட்சி மற்றும் சிக்கந்தர் ராஜா தலா ஒரு விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தனர்.