பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் இஸ்லாமாபாத் ஆல்ரவுண்டர் டிரஸ்ஸிங் ரூமில் சிகரெட் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, இந்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.


முல்தான் சுல்தான்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று இரவு கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த 9வது சீசனின் இறுதிப்போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடேட் அணி இரண்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது. 






இந்தநிலையில், இஸ்லாமாபாத் யுனைடேட் அணிக்காக 35 வயதான ஆல்ரவுண்டர் இமாத், முல்தான் அணிக்கு எதிராக நான்கு ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும், சிறப்பாக பேட்டிங் செய்த இமாத், 19 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, பிஎஸ்எல் இறுதிப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற வரலாற்றை இமாத் வாசிம் படைத்தார். 


இமாத் வாசிம் தான் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கினார். அதனை தொடர்ந்து குஷ்தில் ஷா, ஜான்சன் சார்லஸ் மற்றும் கிறிஸ் ஜார்டன் ஆகிய மூன்று வீரர்களை வெளியேற்றி, பிஎஸ்எல் இறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் ஆனார். இவரது சிறப்பான பந்துவீச்சின் அடிப்படையில், இஸ்லாமாபாத் யுனைடெட் முல்தான் அணியை 9 விக்கெட்டுக்கு 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.160 ரன்கள் துரத்திய இஸ்லாமாபாத் அணி கடைவி பந்தில் இலக்கை துரத்தி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் ஆல்ரவுண்ட் சிறப்பாக செயல்பட்டதற்காக இமாத் வாசிமுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.


இந்தநிலையில், ஐந்து விக்கெட்களை வீழ்த்திய பிறகு, இமாத் வாசிம் டிரஸ்ஸிங் ரூமில் உட்கார்ந்து ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிகரெட்டை எடுத்து அவர் புகைப்பிடித்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில், கேமரா ஒன்று அவர் செய்த செயலை வீடியோவாக எடுக்க, அனைத்தும் வெளிவந்துவிட்டது. 


டிரஸ்ஸிங் ரூமில் இது முதல்முறையல்ல:


டிரஸ்ஸிங் ரூமில் கிரிக்கெட் வீரர் ஒருவர் புகைபிடிப்பது இது முதல் முறையல்ல. முன்னதாக, கடந்த 2022ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஷாஜாத் புகைபிடித்தார். அதேபோல், சமீபத்தில் 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின்போது ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் டிரஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட் பிடித்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. 


இஸ்லாமாபாத் யுனைடெட்: கொலின் முன்ரோ, மார்ட்டின் குப்தில், சல்மான் அலி ஆகா, ஷதாப் கான் (கேப்டன்), அசம் கான் (விக்கெட் கீப்பர்), ஹைதர் அலி, இமாத் வாசிம், ஃபஹீம் அஷ்ரஃப், நசீம் ஷா, ஹுனைன் ஷா, டைமல் மில்ஸ்


முல்தான் சுல்தான்கள்: முகமது ரிஸ்வான் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), யாசிர் கான், உஸ்மான் கான், ஜான்சன் சார்லஸ், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, உசாமா மிர், முகமது அலி, அப்பாஸ் அப்ரிடி