இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலை எடுத்தும் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று இந்திய அணி இரண்டாவது முறையாக தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முன்பாக 2015ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் முன்னிலை பெற்று இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. 


இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி எந்த இடத்தில் உள்ளது? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைய இந்திய அணி செய்ய வேண்டியது என்ன?


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியாவின் இடம்:


இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று தோல்வி அடைந்ததன் மூலம் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி நான்காவது தோல்வியை பதிவு செய்துள்ளது. இதன்காரணமாக இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இந்தியாவின் வெற்றி சதவிகிதம் 58.33 புள்ளிகளிலிருந்து தற்போது 53.47 ஆக குறைந்துள்ளது. இந்திய அணி தற்போது 3வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் 77.78% வெற்றி சதவிகிதத்துடன் ஆஸ்திரேலியா உள்ளது. இரண்டாவது இடத்தில் 71.43 வெற்றி சதவிகிதத்துடன் தென்னாப்பிரிக்கா உள்ளது. 






உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி செல்ல இந்தியா செய்ய வேண்டியது?


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற அடுத்து வரும் இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் சிறப்பான வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இந்திய அணி அடுத்து பங்களாதேஷ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டியது மிகவும் கட்டாயமான ஒன்று. அப்படி இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெரும். 


தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்தாண்டு இறுதியில் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. ஆகவே அந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி செல்வதை உறுதியாக்கிவிடும் என்று கருதப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண