தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 327 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின்பு இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு 305 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 94 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது. இதைத் நடைபெற்ற ஐந்தாவது நாள் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நான்காவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்ரிக்கா அணியைப் பொருத்தவரை, விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால், டிசம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, 54 புள்ளிகளுடன் இந்திய அணி நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. புள்ளி ஏதுமின்றி தென்னாப்ரிக்கா அணி எட்டாவது இடத்தில் உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 2018ஆம் ஆண்டு ஜோகனிஸ்பேர்கில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் தற்போது 2021-22 தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மீண்டும் செஞ்சுரியன் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் முழுவதும் மழை காரணமாக ரத்தானது. அப்படி இருக்கும் போது வெறும் 4 நாட்களில் இந்திய அணி டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை அடுத்து, ஜனவரி 2-ம் தேதி ஜோஹனஸ்பெர்க்கில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும், ஜனவரி 11-ம் தேதி கேப் டவுனில் மூன்றாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. அதனை அடுத்து, மார்ச் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இலங்கை அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்