டி20 கிரிக்கெட் போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களை ஆட்கொள்ளத் தொடங்கிய பிறகு, டெஸ்ட் போட்டிகள் மீதான மோகம் ரசிகர்கள் மத்தியில் குறையத் தொடங்கியது. இதனால், ரசிகர்களுக்கு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் மீதான விறுவிறுப்பை கூட்டுவதற்காக டெஸ்ட் போட்டிகளுக்கான உலக சாம்பியன்ஷிப்பை ஐ.சி.சி. நடத்தி வருகிறது.
முதலாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்து கைப்பற்றிய நிலையில் 2021-2023ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த பட்டியலில் 5வது இடத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது.
பாகிஸ்தான் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் காலகட்டத்திற்குள் ஆடும் 5 டெஸ்ட் போட்டிகளில் பெரும்பான்மையான வெற்றி பெற்றாலே இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் வாய்ப்பை பிரகாசமாக்கும் வகையில் உள்நாட்டிலே நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது.
இந்தாண்டு இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டியிலும், அடுத்தாண்டு தொடக்கத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆட உள்ளது. கராச்சி மற்றும் முல்தான் நகரங்களில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றாலே பாகிஸ்தான் அணியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பு மிகவும் பிரகாசம் ஆகிவிடும். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு, பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது.
தற்போது இந்த புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 70 சதவீதத்துடனும், தென்னாப்பிரிக்க அணி 60 சதவீதத்துடனும் முதல் இரு இடங்களில் உள்ளது. இலங்கை 53.33 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், இந்தியா 52.08 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் 51.85 சதவீதங்களுடன் 5வது இடத்திலும் உள்ளது.