இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. எய்டன் மார்க்கரம் மற்றும் ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோரின் அரைசதத்தால் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 278 ரன்கள் எடுத்தது. 


இதைத் தொடர்ந்து 279 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ஷிகர் தவான் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்து ஆடினார். சுப்மன் கில் 28 ரன்கள் எடுத்திருந்த போது ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 9 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 48 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்திருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை பதம் பார்த்தனர். முதலில் நிதானமாக ஆடினாலும் பின்னர் இருவரும் பவுண்டரி மற்றும் சிக்சர்கள் விளாச தொடங்கினர்.


 






சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் 60 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுமுனையில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 48 பந்துகளில் அரைசதம் விளாசினார். இருவரும் 3வது விக்கெட்டிற்கு ஜோடியாக 161 ரன்கள் சேர்த்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷான் 84 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்களின் உதவியுடன் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன்காரணமாக இந்திய அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த சஞ்சு சாம்சான் கடந்த போட்டியில் விளையாடியதை போல் நன்றாக தொடங்கினார். 


 






தொடர்ந்து அசத்தி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 102 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். ஸ்ரேயாஸ் ஐயரின் சதத்தால் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை எளிதாக வென்றது. ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 111 பந்துகளில் 113 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 11ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.