ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.


அதன்படி, இன்றைய போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 29-வது லீக் போட்டியான இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. முன்னதாக இந்திய அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதேநேரம், அரையிறுதி வாய்ப்பை 90 சதவீதம் இழந்துள்ள இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இன்றைய போட்டியில் களம் இறங்கியுள்ளது. 


டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினார்கள். 13 பந்துகள் களத்தில் நின்ற சுப்மன் கில் 1 பவுண்டரி மட்டுமே அடித்து 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 


ஏமாற்றிய கோலி:


சர்வதேச ஒரு நாள்  கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் (49) அடித்த வீரர் என்ற சச்சின் சாதனையை சமன் செய்வார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கினார் விராட் கோலி.


ஆனால், ரசிகர்களுக்கு இந்த போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கான காரணம், மொத்தம் 9 பந்துகள் களத்தில் நின்ற அவர் ரன் ஏதும் எடுக்காமல் (0) டக் அவுட்  ஆகி பெவிலியன் திரும்பினார்.


இதுவரை அவர் விளையாடி உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகளில் டக் அவுட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தது இதுவே முதல் முறை.


ஷோஃபாவிற்கு குத்து விட்ட விராட்:


இந்நிலையில், பெவிலியன் திரும்பிய கோலி, ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் ஷோபில் கைகளால் விரக்தியில் ஓங்கி குத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


முன்னதாக, கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது இந்திய அணி. அந்த போட்டியில் 116 பந்துகள் களத்தில் நின்ற கோலி 85 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.


சதம் அடிக்க 15 ரன்கள் மட்டுமே தேவை பட்ட சூழல் ஆட்டமிழந்ததால், விரக்தியடைந்து டிரஸ்ஸிங் ரூமை அடைந்தவுடன், அவர் ஷாட்டின் ரீப்ளேயைப் பார்த்துவிட்டு தன் தலையில் 4 - 5 முறை அடித்துகொண்டார். இந்த வீடியோவும் அப்போது சமுக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.