கிரிக்கெட்டில் டி20 வடிவம் என்னதான் சுவாரசியத்தை கூட்டினாலும், எப்போதுமே ராஜாவாக உலா வருவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியே ஆகும். குறிப்பாக, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ஆகும்.
உலகக்கோப்பை அட்டவணை:
நடப்பாண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை ஜூன் 27-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, நாளை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட உள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ந் தேதி தொடங்கும் என்றும், உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 31-ந் தேதி தொடங்கும் என்றும் வதந்திகள் பரவி வரும் நிலையில், நாளை வெளியாகும் அறிவிப்பின் அடிப்படையில் எப்போது உலகக்கோப்பை தொடர் தொடங்கும்? என்பது தெரிய வரும்.
மைதானங்கள்:
இந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், இறுதிப்போட்டியில் கோப்பையை பறிகொடுத்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை தொடரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடத்தும் வகையில் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதரபாத், திருவனந்தபுரம், கவுகாத்தி, புனே, லக்னோ மற்றும் தரம்சாலா ஆகிய நகரங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட நகரங்களில் 5 நகரங்களில் பாகிஸ்தான் அவர்களது போட்டிகளை ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியை நடத்தும் அகமதாபாத் மைதானத்திலே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விறுவிறுப்பான தகுதிச்சுற்று:
அரையிறுதிப் போட்டிகள் மும்பையிலும், சென்னையிலும் நடத்தப்படும் என்று பி.சி.சி.ஐ. அதிகாரிகள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்றுவிட்ட நிலையில், மீதமுள்ள 2 இடங்களை பிடிப்பதற்காக உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது.
அந்த தொடரில் இறுதிப்போட்டியில் ஆடும் 2 அணிகளும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும். இந்த தகுதிச்சுற்றில் முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளும் ஆடி வருகின்றனர் என்பதும், தகுதிச்சுற்றின் லீக் போட்டிகள் முடிந்து சூப்பர் 6 சிக்ஸ் சுற்று தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: World Cup Qualifiers: சூப்பர் 6 சுற்றுக்குள் நுழைந்த இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்.. சூப்பர் 6 போட்டிகள் எப்போது தொடக்கம்..?
மேலும் படிக்க: Points Table TNPL 2023: முதல் இடத்திற்கு தாவிய கோவை.. அசத்திய திருப்பூர்.. டி.என்.பி.எல் புள்ளிப் பட்டியலில் எந்த அணி எந்த இடம்..?