மகளிர் உலககோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 4-ந் தேதி நியூசிலாந்து நாட்டில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில், போட்டியை நடத்தும் நியூசிலாந்து அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்திய அணி தனது முதலாவது போட்டியில் வரும் 6-ந் தேதி பாகிஸ்தானுடன் தனது முதலாவது போட்டியில் மோதுகிறது.


உலககோப்பை தொடருக்காக ஏற்கனவே நியூசிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் அணி அங்கு பயிற்சி போட்டிகளில் ஆடி வருகிறது. இதில், மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியுடன் இந்திய மகளிர் அணி மோதிய பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது.




இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய மகளிரணி  பேட்டிங்கை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய உடனே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா டக் அவுட்டாகி ஏமாற்றினார். அடுத்து ஜோடி சேர்ந்த ஸ்மிரிதி மந்தனாவும், தீப்தி ஷர்மாவும் அதிரடியாக ஆடினர். குறிப்பாக, ஸ்மிரிதி மந்தனா மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை விரட்டினார். அதிரடியாக ஆடிய ஸ்மிரிதி மந்தனா 67 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் தீப்திசர்மா அரைசதம் அடித்தார். அவர் 64 பந்தில் 1 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் மிதாலிராஜூம், யாஸ்திகா பாட்டியாவும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். கேப்டன் மிதாலி ராஜ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். யாஸ்திகா பாட்டியா 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்களை எடுத்தது.




பின்னர், 259 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய வீராங்கனைகள் குடைச்சல் அளித்தனர். தொடக்க வீராங்கனை தியாண்ட்ரா டோட்டின் 1 ரன்னிலும், ஆலியா அலைனா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் டெய்லர் 8 ரன்களில் ஆட்டமிழக்க, பொறுமையாக ஆடிய கைசிகா நைட் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹேலி மேத்யூவ்ஸ், செமைனா கேம்பேல் மிகவும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.


அணியின் ஸ்கோர் 122 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டியபோது சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஹேலி 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாய் சரிந்தது. தனி ஆளாக போராடிய செமைனா கேம்பல் 8வது விக்கெட்டாக வெளியேறினார். அவர் 81 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் ஆடி 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், இந்திய அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  




இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்த்ரகர் 3 விக்கெட்டுகளையும், தீப்திசர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட், மேக்னா சிங் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண