ஐ.பி.எல்., டி20 உலக கோப்பை கிரிக்கெட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எத்தனை கிரிக்கெட் தொடர் வந்தாலும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் 50 ஓவர் உலககோப்பை தொடரே ஆகும்.  4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த திருவிழா இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தியாவில் தொடங்க உள்ளது.


உலககோப்பை தகுதிச்சுற்று:


நடப்பு உலககோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் களமிறங்க உள்ளன. தரவரிசையில் முன்னணியில் உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில், கடைசி 2 இடங்களை பிடிப்பதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது.


ஜிம்பாப்வே நாட்டில் இந்த தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தகுதிச்சுற்று போட்டியில் 2 குழுக்களாக அணிகள் களமிறங்க உள்ளன. இதில், ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேபாள அணியும் ஜிம்பாப்வே அணியும் முதல் போட்டியில் மோதுகின்றன.


ஜிம்பாப்வே - நேபாளம்:


இரு அணிகளையும் ஒப்பிடும்போது ஜிம்பாப்வே அணி பலமிகுந்த அணியாகவே உள்ளது. குழு ஏ பிரிவில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.  குழு பி பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, அயர்லாந்து மற்றும் ஓமன் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.


சூப்பர் 6 பிரிவில் இடம்பிடிக்கும் முதல் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இந்த 2 அணிகளும் உலககோப்பை தொடருக்கு தகுதி பெறும். இந்த தகுதி சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


விறுவிறுப்பு:


இன்று தொடங்கும் இந்த போட்டி வரும் ஜூலை 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டிகள் அனைத்தும் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள ஹராரே, டகாசிங்கா, கியூன்ஸ், புலவாயோ ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அணிகள் அனைத்திற்கும் உலககோப்பையில் ஆட அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டும் என்பதாலும், இந்த தொடர் உலககோப்பைக்கு இணையாக விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.