நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களாக மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார். இவரை பற்றிய பல்வேறு தகவல்களும் வதந்திகளும் சமூக வலைதளங்களில் வலம் வந்தவாறு இருந்தது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரோபோ சங்கர் வழக்கமாக இருக்கும் சுறுசுறுப்பு குறும்புத்தனம் இன்றி மிகவும் உடல் இளைத்து உடல் நலம் குன்றி சோர்வாக காணப்பட்டார். இது அவரின் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. 


இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரோபோ சங்கர், 5 மாதங்கள் படுத்த படுக்கையாக மரணத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டேன். அதற்கு காரணம், என்னிடம் இருந்த சில பல கெட்டப் பழக்கங்கள். அதில் அடிமையாகிவிட்டேன்” என தெரிவித்தார்.


காவல்துறை சார்பில் தனியார் கல்லூரி ஒன்றில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரோபோ சங்கர், “சமீபத்தில் 4 மாதங்களாக யூடியூபில் நாந்தான் சூப்பர் ஸ்டாராக இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். தெரியாமல் கிளி வளர்த்துவிட்டேன். அது நம்முடன் விளையாடும், பேசும் என நினைத்து வளர்த்தேன். அது என்ன கிளி என்று எனக்குத் தெரியாது. அந்தக் கிளியால் நான் பட்டபாடு பெரும்பாடு. அடுத்து என் உடல் எடை குறைப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.


காரணம், சினிமாவுக்காக நான் உடல் எடையை குறைத்தேன். மேலும், அப்போது நான் மஞ்சள் காமாலை நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தேன். 5 மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்தேன். மரணத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டேன். அதற்கு, காரணம் என்னிடம் இருந்த சில பல கெட்டப் பழக்கங்கள். அதில் அடிமையாகிவிட்டேன். இந்த நிகழ்ச்சிக்கு இவர் ஏன் வந்திருக்கிறார் என நீங்கள் நினைப்பீர்கள். அதற்கு தகுதியான ஆள் நான். இப்போது நான் அறிவுரை சொல்லும் இடத்தில் இருக்கிறேன்.


மேலும், நான் உங்களுக்கு ஒரு பெரிய உதாரணமாகவும் இருக்கிறேன். வாழ்க்கையில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கே கூட சென்றிருக்கிறேன். கடந்த ஜனவரி மாதம் வாழ்க்கையே வெறுத்து என்னால் அந்தப் பழக்க வழக்கமில்லாமல் இருக்கவே முடியவில்லை. நடு ராத்திரியெல்லாம் எழுந்து கிறுக்கு போல திரிய ஆரம்பித்தேன். அப்போது நக்கீரன் கோபால் என்னை சரியான மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். என்னுடைய ரத்தத்தில் மஞ்சள் காமாலையின் பாதிப்பு இருந்ததும், கெட்டப் பழக்கங்களால் என்னுடைய எந்த எந்த  உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அறிய செய்தார். மருத்துவரின் சரியான வழிகாட்டுதலை பின்பற்றி இரவு, பகலாக என்னை பார்த்துக்கொண்டது என்னுடைய குடும்பம்தான். நண்பர்கள் எனக்காக பிரார்த்தனை செய்ததுடன், எனக்கு ஊக்கம் அளித்தனர். இன்று என்னிடம் எந்த கெட்டப்பழக்கம் இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன்”. இவ்வாறு ரோபோ ஷங்கர் தெரிவித்தார்.


மேலும் படிக்க 


Squash World Cup: உலகக்கோப்பை ஸ்குவாஷ் தொடர்.. அரையிறுதியில் இந்திய அணி தோல்வி.. ரசிகர்கள் சோகம்...


Minister Udhayanidhi: நல்லதுதானே சொல்லி இருக்காரு.. விஜய் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?